நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும் போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவக் கல்லூரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக பாலமுருகன் அடிமை சாமிகளுக்கு திருவுரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா சவிதா பல்கலைக்கழக வேந்தர் எம்.வீரையன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பாலமுருகனடிமை சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குன்னகுடி திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேருர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்ததை போக்க கல்வி நிறுவனங்களே நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லி தருவதன் மூலமே மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க வேண்டும் .
தமிழகத்தில் உள்ள ஆதினங்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார்.நாடாளுமன்றத்தில் செங்கோலை காணும் போதெல்லாம் ஒரு தமிழராக தான் மகிழ்ச்சியில் பூரிப்படைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.