தமிழகத்தில் வெப்பஅலை தாக்கம் குறித்து முன்னேற்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை

225 0

தமிழகத்தில் வெப்ப அலை தாக்கம் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை மூலம் 21-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்தும், உயர் கல்வி நிறுவனங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் வெப்ப அலையினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் மேற்கொள்ள ஆவண செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறே மருத்துவத் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது குறித்தும், வெப்ப அலையினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், கால்நடைத் துறை சார்பாக கால் நடைகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை மூலமாக கட்டுமானப் பணியாளர்களுக்கு அளிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் நிழல் பந்தல்கள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்புத் திட்டப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் நிழல் பந்தல் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சித் துறை உரிய முறையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் வெப்ப அலையின் தாக்கத்தினை எதிர்கொள்வதற்கான செயல் திட்டம் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் இது தொடர்பாக உரிய அறிவுரைகள் வருவாய்த்துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட அறிவுரைகளுக்கு ஏற்ப வெப்ப அலை தாக்கம் குறித்து உரிய கண்காணிப்பு செய்யப்பட்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் கொ. சத்யகோபால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஹர்மர்தர் சிங், உயர்கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதய சந்திரன், வேளாண்மை துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி, தேசிய ஊரக சுகாதார இயக்க திட்ட இயக்குநர் தரேஸ் அகமது, பேரிடர் மேலாண்மை இயக்குநர் ஜி.லதா மற்றும் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் ச.கந்தசாமி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.