பொண் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழா

677 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் தமிழாலயங்களில் ஒன்றான பொண் தமிழாலயம் தனது முத்தகவை நிறைவு விழாவைக் கடந்த 14.09.2024 சனிக்கிழமை 14.00 மணிக்கு தேசியம், மொழி, பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு பயணித்த மக்களையும் மாவீரர்களையும் நினைவேந்தி, பொதுச்சுடரேற்றித் தொடங்கியது. பொதுச்சுடரினை பொண் நகரத்தில் உள்ள Bildungs-und Familienzentrum Vielinbusch நிர்வாகி திருமதி நெவ்றியே வெஜ்ஸா அவர்கள் (Frau Nevrije Fejza ) ஏற்றி வைத்தார்.

சிறப்பு வருகையாளர்களான சீக்பேர்க் நகர முதல்வர் திரு. ஸ்ரெபான் றோஸ்மன் (Herr Bürgermeister Stefan Rosemann) அவர்கள், சீக்பேர்க் பாடசாலை Hans Alfred Keller Schule நிர்வாகி திருமதி சடகியான் (Frau Sadeghian) அவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ்த்திறனாளன்” திரு. இராஜ மனோகரன், கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, பொண் தமிழாலயத்தின் நிர்வாகி திருமதி மஞ்சுளாதேவி மகேஸ்வரலிங்கம், முன்னாள் நிர்வாகி திருமதி சறோஜினிதேவி சிறீதரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் திரு. சின்னையா நாகேஸ்வரன், நகரச் செயற்பாட்டாளர் திரு. சுதர்சன் சண்முகரத்தினம், திருமதி நெவ்றியே வெஜ்ஸே, பொண் தமிழாலயப் பெற்றோர் பிரதிநிதி திரு. இராஜரட்ணம் சசிகுமார், தமிழாலய உதவிப் பெற்றோர் பிரதிநிதி திருமதி மரீனா ஜெயக்குமார் மற்றும் பெற்றோர் திருமதி அர்ஜிதா வருணஉதயன் ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றி வைத்தனர். இவர்களுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் கலைப்பிரிவுத் துணைப் பொறுப்பாளர் திரு. விபிலன் சிவநேசன், Frau Rafaela Eulberg (Interkultur-Qualitätsmanagement, Programmplanung) தமிழ்க் கல்விக் கழகத்தின் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களான “தமிழ் மாணி” திரு. செல்லர் தெய்வேந்திரம், திருமதி மோகனா புண்ணியமூர்த்தி அயல் தமிழாலய நிர்வாகிகள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் ஆகியோரும் சிறப்பு வருகையாளர்களாக வருகை தந்திருந்தனர். அனைவரும் தமிழர் பண்பாடு தழுவிய நிகழ்வுகளுடன் மண்டபத்துக்குள் அழைத்து வரப்பட்டனர்.

அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றைத் தொடர்ந்து பொண் தமிழாலயத்தின் முத்தகவை நிறைவு விழாவின் அரங்க நிகழ்வுகள் தொடங்கின. வரவேற்புரையை அடுத்து பொண் நகர முதல்வர் திருமதி கற்ஜா டோனர் (Frau Katja Dörner) அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. அரங்க நிகழ்வுகள் முத்தமிழைப் படைத்து மெருகூட்டி நகர்ந்து செல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு 12ஐ நிறைவுசெய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளின் முத்தாரமாய் திகழ்ந்தது. அனைத்து மாணவர்களும் நமது பண்பாட்டு உடையணிந்து பெற்றோருடன் அரங்கு வந்து, தமக்கான மதிப்பளிப்பைச் சிறப்பு வருகையாளர் சீக்பேர்க் நகர முதல்வர் திரு. ஸ்ரெபான் றோஸ்மான் (Siegburg Bürgermeister Herr Stefan Rosemann) அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டமை விழாவின் ஒரு சிறப்பம்சமாக விளங்கியது. அத்துடன் தமிழ்த்திறன், கலைத்திறன், தேர்வுத் திறனாளர்களுக்கான மதிப்பளிப்புகளும் இடம்பெற்று, முத்தகவை விழாவின் முத்தாரமாய் முத்தகவை மலர் வெளியீடும் இடம்பெற்றது.

30 பெற்றோர்கள் ஒளியேற்றி வர தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் மூத்த ஆசிரியருமான “தமிழ் மாணி” திருமதி மனோகரி உதயகுமார் அவர்களால் மலர் அரங்கிற்கு எடுத்து வரப்பட்டது. சிறப்பு மலரைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி வெளியிட்டுவைக்க முதற்பிரதியை பொண் தமிழாலயத்தின் முன்னாள் நிர்வாகி திருமதி சறோஜினிதேவி சிறீதரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மலர் வெளியீட்டுரையைத் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் நிகழ்த்தினார். ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பினைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். நிறைவாக மொழியையும் கலையையும் பண்பாட்டையும் புலத்திலே பயிராக்கி, தாய் நிலத்திலே பதியமிட்டு தமிழரின் தாகத்தை நிறைவேற்றும் இலக்கு நோக்கி நகர்வோம் என்ற உறுதியோடு பொண் தமிழாலய முத்துவிழா இனிதே நிறைவுற்றது.