ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், அனைத்துக் குழப்பங்களுக்கும் மத்தியில் இலங்கை இன்னமும் ஓர் துடிப்பான ஜனநாயக நாடாகத் திகழ்வதை நாம் நிச்சயமாகக் கொண்டாடவேண்டும். பல வருடகால தொடர் நெருக்கடிகளின் பின்னரும் கூட எம்மால் தேர்தலில் வாக்களிப்பதற்கும், அதனூடாக தலைமைத்துவத்தை மாற்றுவதற்கும் முடிகிறது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (21) நடைபெற்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுத்திருந்த மிகமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து உருவான மக்கள் தன்னெழுச்சிப்போராட்டத்தின் விளைவாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். இவ்வாறானதொரு பின்னணியில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தல் மிகவும் காத்திரமானதொரு தேர்தலாகவே நோக்கப்படுகின்றது.
இத்தேர்தலில் வாக்குப்பதிவு செயன்முறை பெருமளவுக்கு அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், குறிப்பிடத்தக்களவிலான அசம்பாவிதங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (பெப்ரல்) தெரிவித்திருக்கிறது. அதேபோன்று இம்முறை ஜனாதிபதித்தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டியிருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல்.ரத்நாயக்க, அதற்காக நாட்டுமக்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ‘நாம் ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், அனைத்துக் குழப்பங்களுக்கும் மத்தியில் இலங்கை இன்னமும் ஓர் துடிப்பான ஜனநாயக நாடாகத் திகழ்வதைக் கொண்டாடவேண்டும்’ என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
‘முப்பது வருடகால யுத்தம், இரண்டு கலவரங்கள், தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு வலுவான ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக் காரணமாக அமைந்த ‘அரகலய’ போராட்டம் ஆகியவற்றின் பின்னரும் கூட எம்மால் தேர்தலில் வாக்களிப்பதற்கும், அதனூடாக சிலவேளைகளில் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கும் முடிகிறது. 21 ஆம் நூற்றாண்டில் உலகத்தில் வாழும் சுமார் அரைவாசி மக்களுக்கு இந்த உரிமை இல்லை என்பதை நாம் மறந்துவிடாதிருப்போம்’ எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.