அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுங்கள் – ஜனாதிபதி வேட்பாளர்கள் மக்களிடம் கோரிக்கை

67 0

ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் வாக்களித்தனர். வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என பொதுமக்களிடம் வலியுறுத்தினார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை  இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் காலை வேளையில் வாக்களித்தனர்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி மைத்ரி விக்கிரமசிங்க ஆகியோர் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  வாக்களிப்புக்கான வரிசையை நானே தோற்றுவித்தேன். அன்றைய ஸ்திரமற்ற நிலை நீடித்திருந்தால் வாக்களிப்பு இடம் பெற்றிருக்காது.

அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றது.  புதிய பயணத்தை நோக்கி செல்வோம். வன்முறையற்ற வகையில் அமைதியாக செயற்படுங்கள். போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க வாக்களித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,இலங்கை அரசியல் வரலாற்றை மாற்றியமைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் காணப்பட்டது. இலங்கையில்  காலம் காலமாக அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் மாற்றுதற்கு தேர்தல் இடம்பெற்றுள்ளது.

இந்த தேர்தல் தான் முறைமை மாற்றத்துர்க்காக இடம்பெற்றுள்ளது. வெற்றியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். ஜனநாயக ரீதியில் தமது விரும்பும் அரசியல் தரப்பினருக்காக செயற்படவும், வாக்களிக்கவும் அனைவருக்கும் உண்டு அதனை பாதுகாக்க வேண்டும்.

நாட்டுக்கு புதிய அரசியல் கலாச்சாரம் அவசியம்.வெற்றி யாருடையதாக இருந்தாலும் அதனை அமைதியாகவும், வன்முறையற்ற வகையிலும் கொண்டாட வேண்டும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாச மற்றும் அவரது பாரியாரான ஜலனி பிரேமதாச ஆகியோர் ராஜகிரிய பகுதியில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலையத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஜனநாயக முறையில் தேர்தல் இடம்பெற்றது.ஆகவே ஜனநாயக அம்சங்களை பாதுகாக்க வேண்டியவது அவசிமானது. வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுங்கள். வன்முறையற்ற சூழலை தோற்றுவிக்கும் பொறுப்பு அனைத்து அரசியல் தரப்பினருக்கும் உண்டு என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ  வீரகெடிய மெதமுல்ல வித்தியாலயத்தில் வாக்களித்தன் பின்னர், யாருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்களாணையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அமைதியான முறையில் வெற்றியை கொண்டாட வேண்டும் என்றார்.