ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தோம்!- ரணில் ஆதரவு அமைச்சர்கள்

7 0

அடுத்த வேளை உணவு தொடர்பில் எவரும் கலக்கமடையவேண்டிய அவசியம் ஏற்படாத, தமது குடும்பத்தின் நலன் குறித்து எவரும் கவலையடையும் நிலையேற்படாத, அனைவரும் சுபீட்சத்துடன் வாழக்கூடியதொரு நாட்டை இலக்காகக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தில் நீண்டகால அனுபவத்தையும், பொருளாதார ரீதியான தூரநோக்கு சிந்தனையையும் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத் தாம் வாக்களித்ததாக அவருக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ‘அடுத்த 5 வருடங்களுக்கு எமது நாட்டின் தலைவரைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இன்று எமக்குக் கிடைத்திருக்கின்றது. எமது பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய, பொருளாதார மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய தலைவரையே நாம் தெரிவுசெய்யவேண்டும். மிகவும் அவசியமான தருணங்களில் மிகக் கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய தலைவரையே நாம் தெரிவுசெய்யவேண்டும். எமது நாட்டை வழிநடத்தக்கூடிய அனுபவமுடைய தலைவரையே நாம் தெரிவுசெய்யவேண்டும். எந்தவொரு சூழ்நிலையையும் நெருக்கடியையும் அமைதியாகக் கையாளக்கூடிய தலைவரையே நாம் தெரிவுசெய்யவேண்டும்.

இதற்கு முன்னர் சாதித்துக் காட்டிய, அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவமாக நடத்தக்கூடிய, எமது நாட்டை மீண்டுமொரு நெருக்கடியை நோக்கிக் கொண்டுசெல்லாத, மாறாக நம்மனைவரையும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவரையே நாம் தெரிவுசெய்யவேண்டும்.

அதன்படி அடுத்த 5 வருடங்களுக்கு எமது நாட்டை வழிநடத்திச்செல்வதற்காக நான் ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பேன்’ என இன்று (21) வாக்களிப்பதற்குச் செல்வதற்கு முன்பாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவரது ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ‘பொருளாதார ஸ்திரத்தன்மையையும், எமது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தையும் உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு அநுராதபுரத்திலுள்ள கே.பி.ரத்நாயக்க வித்தியாலயத்தில் நான் எனது வாக்கைச் செலுத்தினேன். நாமனைவரும் ஒன்றிணைந்து அடுத்துவரும் தலைமுறைகளுக்காக வலுவானதும், மீளெழுச்சி அடையக்கூடியதுமான இலங்கையைக் கட்டியெழுப்பமுடியும்’ என தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘நான் இன்று என்னுடைய நாட்டின் எதிர்காலத்துக்காக வாக்களித்தேன். அடுத்த வேளை உணவு தொடர்பில் எவரும் கலக்கமடையவேண்டிய அவசியம் ஏற்படாத, தமது குடும்பத்தின் நலன் குறித்து எவரும் கவலையடையும் நிலையேற்படாத, அனைவரும் சுபீட்சத்துடன் வாழக்கூடியதொரு நாட்டை இலக்காகக்கொண்டு வாக்களித்தேன். இந்த விரக்தி நிலையிலிருந்து நம்பிக்கையளிக்கும் புதிய யுகத்தை நோக்கி தனது வலுவான கரம்கொண்டு நம்மை வழிநடத்திச்செல்லக்கூடிய தலைவருக்கு நான் வாக்களித்தேன். மூழ்கிய நமது நாட்டை மீட்டெடுத்து வெளிச்சத்தை நோக்கி முன்நகர்த்திச்செல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்கியவருக்கு வாக்களித்தேன். பல மில்லியன் மக்களைப் பாதுகாத்ததுடன் மாத்திரமன்றி தினந்தோறும் எமது மக்களின் நல்வாழ்வுக்காகப் போராடிவரும் அறிவும், தூரநோக்கு சிந்தனையும், செயற்திறனும் கொண்ட  நானறிந்த ஒரேயொரு நபரான ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களித்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஆட்சி நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் நிரூபிக்கப்பட்ட செயற்பாட்டையும் பொருளாதார ரீதியிலான தூரநோக்கு சிந்தனையையும் கொண்டவரும், உரிய தருணத்தில் இலங்கையை மீட்டெடுப்பதற்கு முன்வந்தவருமான வேட்பாளருக்கே நான் வாக்களித்தேன்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க அவரது ‘எக்ஸ்’ தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.