20.09.2024
த.வெள்ளையன் அவர்களிற்கு ஆழ்ந்த இரங்கல்
சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல், தமிழினத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் வெள்ளையன் அவர்கள், உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களிற்கு அதிர்ச்சியினையும் ஆழ்ந்த துயரினையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழினத்தின் மேன்மைக்காக இறுதிவரை தன்னால் முடிந்தளவு பணியாற்றியதோடு, தமிழீழ மக்கள் சிறிலங்கா அரச ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து பணிபுரிந்த உணர்வாளராவார்.
ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தமிழினத்தின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நெருக்கடி நிறைந்த காலங்களில் அடக்குமுறைக்கெதிராக ஓங்கிக் குரல் கொடுத்து வந்ததோடு, 2009 இல் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் சிறிலங்காப் பேரினவாத அரசு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்துகொண்டிருந்த அச்சூழலில், சிறிலங்கா அரசைக் கண்டித்து கண்டனங்களை வெளியிட்டதோடு, தமிழின அழிப்பை எதிர்த்துத் தமிழ்நாட்டில் தொடர்போராட்டங்களை ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்தார்.
தமிழ்நாடு அரசு கண்துடைப்பிற்காக, மனிதச்சங்கிலிப் போராட்டத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் தமிழீழத் மக்களுக்குத் துரோகமிழைந்த சூழமைவில், உணர்வெழுச்சியோடு தமிழின அழிப்பிற்கெதிராக உறுதியோடு போராடிய இனப்பற்றாளனாக இருந்ததோடு மட்டுமல்லாது, தமிழீழத்தின் வெளியீடான “காற்றுக்கென்ன வேலி” என்னும் குறுந்திரைப்பட உருவாக்கத்திற்கான பங்களிப்பினையும் வழங்கியிருந்தார்.
தமிழருக்குத் தீர்வாகத் தமிழீழத் தாயகம் விரைவில் மலரும் என்ற உறுதியோடு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சுவரை தன்பணியாற்றிய த.வெள்ளையன் அவர்களிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.