பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன!

57 0

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டத்துக்கும், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கும் முரணாக செயற்பட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் , பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு 63 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் 3083 பொலிஸ் நடமாடும் சேவை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 12,400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்றும் (சனிக்கிழமை), நாளையும், (ஞாயிற்றுக்கிழமை)  269  வீதிகளில் விசேட வீதி தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்படுமாயின் அதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதற்காக பொலிஸார்,பொலிஸ் விசேட அதிரப்படையினர் பணியில் அமர்த்தப்படுவர். கடமையில் ஈடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேபோன்று நாடளாவிய ரீதியில் கலகத்தடுப்பு பிரிவுகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அடையாளம் காணப்படும் பகுதிகளில் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் சில இடங்களுக்கு விசேட பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச சபைகளை அடிப்படையாக கொண்டு மின் விநியோகிக்கும் மத்திய நிலையங்கள், நீர் விநியோகப் பிரிவுகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.அத்துடன் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு படையினரும் 2,500 க்கும் மேற்பட்ட பொலிஸ் விசேட அதிரப்படையினரும் கடமையில் ஈடுப்படுப்பட்டுள்ளனர்.

வாக்கெடுப்பு மத்திய நிலையங்களை அண்மித்த பகுதியில் பொலிஸ் நடமாடும் விசேட சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.அப்பகுதியில் கலகத் தடுப்பு பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்படும் என்பதுடன் விசேட வீதி தடைகளும் இடப்படும்.அத்துடன்  கொழும்பு, ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பிற்கும், தேர்தல் நடவடிக்கைகளுக்கும்,   பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.