ஒட்டுமொத்த தேர்தல் செயன்முறையையும் கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய குறுங்காலக் கண்காணிப்பாளர்கள் ஏற்பாடு

12 0

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த குறுங்கால கண்காணிப்பாளர்கள் 32 பேர் வியாழக்கிழமை (19) நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பிரசாரங்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து தேர்தல் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் அவர்களது பரந்துபட்ட கண்காணிப்புப்பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள நிலையில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அழைப்பொன்றை விடுத்திருந்தது.

அவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ் ஆமர் தலைமையில் பிரதி தலைமைக் கண்காணிப்பாளர் ஒருவரும், தேர்தல் கண்காணிப்பு நிபுணர்கள் 9 பேரும் அடங்கிய விசேட குழு, நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள் 26 பேர் அடங்கிய குழு மற்றும் குறுங்காலக் கண்காணிப்பாளர்கள் 32 பேர் அடங்கிய குழு என மொத்தமாக 68 பேரடங்கிய கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது.

அதற்கமைய பிரதி தலைமைக் கண்காணிப்பாளர் ஒருவரையும், தேர்தல் கண்காணிப்பு நிபுணர்கள் 9 பேரையும் கொண்ட குழு கடந்த மாதம் 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்த 26 நீண்டகாலக் கண்காணிப்பாளர்கள், தலைமைக் கண்காணிப்பாளர் நச்சோ சன்செஸ் ஆமரால் நாட்டின் 9 மாகாணங்களுக்கும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகப் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் குறுங்காலக் கண்காணிப்பாளர்கள் 32 பேர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (19) நாட்டை வந்தடைந்ததுடன், அவர்கள் அனைவரும் நச்சோ சன்செஸ் ஆமரினால் நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியைக் கண்காணித்திருப்பதுடன், இன்றைய தினம் வாக்களிப்பு நிலையத்திறப்பு, வாக்களிப்பு, வாக்கு எண்ணல், முடிவு அறிவித்தல் உள்ளிட்ட சகல தேர்தல் செயன்முறைகளையும் கண்காணிக்கவுள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் பிரதி தலைமைக் கண்காணிப்பாளர் இன்ரா லேஸ், ‘குறுங்காலக் கண்காணிப்பாளர்களின் அவதானிப்புக்களும், அதனடிப்படையிலான தகவல்களும் தேர்தல் செயன்முறை தொடர்பில் பக்கச்சார்பற்ற, தரவுகளை மையப்படுத்திய மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கு எமக்குப் பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் இக்கண்காணிப்பு நடவடிக்கையானது சுயாதீனமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்துவதில் தாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.