ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமையால் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு ; விசாரணை ஆரம்பம்

59 0

தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர்  ஒருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் செலுத்தப்பட்ட  மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவந்தி ரூப்பசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலையில்  பலத்த காயங்களுடன் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 63 வயதுடைய வயோதிபர் ஒருவர் வைத்தியசாலையில் ஊசி மூலம் செலுத்தப்பட்ட  மருந்து ஒவ்வாமை காரணமாகக் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊசி மூலம் செலுத்தப்பட்ட  மருந்து காரணமாக குறித்த வைத்தியசாலையில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த  ஊசி மூலம் செலுத்தப்பட்ட  மருந்து தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்துகளை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நேற்று (19) தடை விதித்துள்ளது.