விண்வெளியில் பிறந்தநாள் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்: நெட்டிசன்கள் வாழ்த்து

17 0

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், இன்று (செப்.19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். சுமார் ஒரு வார காலம் அவர்களது பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சுமார் நூறு நாட்களை கடந்தும் பூமி திரும்பாமல் அவர்கள் அங்கேயே உள்ளனர்.

அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அதற்கு காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலனில் பூமிக்கு திரும்ப உள்ளார்கள். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸுக்கு இது இரண்டாவது பிறந்தநாள்: இதற்கு முன்பு கடந்த 2012-ல் விண்வெளி பயணம் மேற்கொண்ட போது தனது பிறந்தநாளை சுனிதா வில்லியம்ஸ் அங்கு கொண்டாடி இருந்தார். 2012-ல் ஜூலை 14 முதல் நவம்பர் 18 வரையில் சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அங்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

இந்தியாவில் அதிகம் அறியப்படும் விண்வெளி வீராங்கனையாக கல்பனா சாவ்லாவுக்கு அடுத்ததாக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். அதனால் அவருக்கு சமூக வலைதள பயனர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது அப்பா தீபக் பாண்டியா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அமெரிக்காவில் கடந்த 1965-ல் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார். பலமுறை இந்தியாவில் உள்ள தங்களின் பூர்வீக கிராமத்துக்கு அவர் வந்துள்ளார்.

1998-ல் விண்வெளி வீராங்கனையாக அவரை நாசா தேர்வு செய்தது. பயிற்சிக்கு பிறகு ரஷ்ய விண்வெளி முகமையின் விண்வெளி பயணத்துக்கு உதவியாக பணிபுரிந்தார். ரோபாட்டிக்ஸ் பிரிவிலும் பணியாற்றினார். 2006-ம் ஆண்டு முதல் முறையாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். இரண்டாவது விண்வெளி பயணத்தை 2012-ல் மேற்கொண்டார்.

இந்த இரண்டு விண்வெளி பயணத்தில் சேர்த்து மொத்தமாக 322 நாட்களை அவர் விண்ணில் செலவிட்டுள்ளார். விண்ணில் நெடுநேரம் நடை பயின்ற (ஸ்பேஸ் வாக்) முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார்.