அமெரிக்கா வரும் பிரதமர் மோடியை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்

10 0

அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். வரும் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்கள் அமெரிக்காவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.பயணத்தின் ஒரு பகுதியாக, செப்.23 ஆம் தேதி ‘Summit of the Future’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி, ஐ.நா சபையில் உரையாற்றுகிறார். அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாநாட்டுக்கு இடையே, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர் ட்ரம்ப், தன் மீதான இரண்டாவது படுகொலை முயற்சிக்குப் பின்னர் முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மிச்சிகன் மாகாணம் ஃப்ளின்ட் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசுகையில், “இந்திய – அமெரிக்க வர்த்தக உறவை இந்தியா மிகப்பெரிய அளவில் துஷ்பிரயோகம் செய்கிறது. இருந்தாலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அற்புதமானவர். அடுத்த வாரம் அமெரிக்க வரும் அவரை நான் சந்திப்பேன்” எனக் கூறினார்.

இருப்பினும் இந்த சந்திப்பு பற்றி மேலதிக உறுதியான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள பிரதமரின் பயணத் திட்டம் பற்றிய அறிவிப்பிலும் கூட இது குறித்து ஏதும் இல்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களம் காண்கிறார். ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.