நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைது !

13 0

புத்தளம், வனாத்தவில்லு, தப்போவ வனப்பகுதியில் நீண்டகாலமாக மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். 

கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த வனப்பகுதியில் சுற்றித்திரியும் வன விலங்குகளையும் வேட்டையாடியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து துப்பாக்கி, 02 ரவைகள், 09 வெற்று தோட்டாக்கள், இரும்பு ஆயுதங்கள், 100 கிலோ மான் இறைச்சி மற்றும் மரப் பலகைகள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரால்மடு – எலுவங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் வனாத்தவில்லு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர்.