அப்துல் கலாம் நினைவகத்துக்கு ராமேசுவரத்தில் அடிக்கல்

365 0

9C2A9388-9EE8-40A1-82EA-773BBD997EDD_L_styvpfமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு, மேகாலயா மாநிலம் சென்றபோது மரணமடைந்தார். அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஊராட்சிக்குட்பட்ட பேய்க்கரும்பில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர். அதன் பிறகு அங்கு நினைவிடமும் அமைக்கப்பட்டது.

ராமேசுவரம் வரும் வெளிநாட்டினரும் உள்நாட்டு மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் அப்துல்கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2.11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நினைவிடத்தில் அறிவுசார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்காக முதல்கட்டமாக ரூ.60 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, கட்டுமான பணிகளுக்கு தேவையான கூடுதல் இடத்தை ஒதுக்க தமிழக அரசை கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆய்வு செய்து, ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அரசுக்கு தெரிவித்தார்.

அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மணிமண்டபம், அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வந்தது.

மேலும் நினைவிடத்தில் அப்துல்கலாமின் சிலை வைக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் வெண்கல சிலை, ஐதராபாத்தில் உருவாக்கப்பட்டது.

இந்த சிலையை நிறுவுவதற்கு அப்துல்கலாம் நினைவிடத்தில் பீடமும் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிலை கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் பீடத்தில் நிறுவப்பட்டது.

இதனை தொடர்ந்து அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இன்று (புதன்கிழமை) பேய்க்கரும்பு நினைவிடத்தில் அப்துல்கலாமின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி காலை முதலே அங்கு ஏராளமானோர் திரண்டனர். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ் ராம்ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபில், மணிகண்டன் மற்றும் மாவட்ட கலெக்டர் நடராஜன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர்.

அவர்கள் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் புதுச்சேரியை சேர்ந்த சிற்ப கலைஞர் குபேந்திரன் அமைத்திருந்த அப்துல் கலாமின் 100 முகம் கொண்ட மணல் சிற்பங்களை பார்வையிட்டனர். அதன் பிறகு சிலை திறப்பு விழா நடைபெற்றது.

மத்திய மந்திரி வெங்கையாநாயுடு சிலையை திறந்து வைத்தார். மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், பொன்.ராதா கிருஷ்ணன், சுபாஷ் ராம் ராவ் பாம்ரே, தமிழக அமைச்சர்கள் நிலோபர் கபீல், மணிகண்டன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

தொடர்ந்து அருங்காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் போன்றவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டை மத்திய மந்திரிகள் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், பரமக்குடி எம்.எல்.ஏ. முத்தையா, முன்னாள் சேர்மன் கீர்த்திகாமுனியசாமி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மறைந்த அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டி மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆங்கிலத்தில் பேசியதை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழில் மொழி பெயர்த்தார்.