200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு

12 0
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு (COG) நாட்டிற்கு வருகை  தந்துள்ளது.

இது பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவின் 200 ஆவது தேர்தல் கண்காணிப்பு பணி ஆகும்.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக  தேர்தல் ஆணைக்குழுவின்  அழைப்பை ஏற்று பொதுநலவாய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட  15 பேர் கொண்ட குழு நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

இந்த குழுவின் தலைவர் சிசெல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டேனி பாரே  ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

பொதுநலவாய அமைப்பின் 200 ஆவது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட இலங்கைக்கு வருகை தந்துள்ளமை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேலும், பொதுநலவாய அமைப்பின் முழு தேர்தல் சுழற்சி அணுகுமுறையின் ஒரு பகுதியாக, உறுப்பு நாடுகளுடனான அதன் ஈடுபாட்டில், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்த உதவுவதற்கும், தேர்தல்களின் போது பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை செயல்படுத்துவதற்கும் நாங்கள் இங்கு வருகை தந்துள்ளோம்.

11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பையும் எங்கள் குழுவினர் கண்காணித்துள்ளனர்.

மேலும்,  குழுவினர் சிவில் சமூகம், அரசியல் கட்சிகள், பொலிஸ் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். அத்தோடு, தேர்தல் ஆணைக்குழு,சிவில் சமூக பிரதிநிதிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட பலரை சந்திக்கவுள்ளனர்.

தேர்தலுக்கு முன்னரான  சூழல், வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மற்றும் தேர்தலுக்கு பின்னரான காலம் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் கவனித்து தேர்தல் கண்காணிப்புக் குழு மதிப்பீடு செய்யும்.

இந்த குழு 19 ஆம் திகதி முதல்  கண்காணிப்பாளர்களை சிறு குழுக்களாக வெவ்வேறு மாகாணங்களுக்கு தேர்தல் முன்னாயத்தங்களை அவதானிக்க மற்றும் அந்தந்த இடங்களில் உள்ள உள்ளூர் பிரதிநிதிகளை சந்திக்க அனுப்பும்.

தேர்தல் நடைபெறும் நாளில் வாக்களிப்பு ஆரம்பம் முதல் நிறைவு, வாக்குகள் எண்ணுதல் மற்றும் முடிவுகள் வெளியாகும் முகாமைத்துவ செயல்முறைகளைக் கண்காணிப்பார்கள்.

மேலும், 23 ஆம் திகதி தேர்தல் கண்காணிப்பு குறித்து அறிக்கை வெளியிடும்.

தேர்தல் செயல்முறையின் பல்வேறு அம்சங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்கும் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என தெரிவித்துள்ளார்.