வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கலை அமுதன் சேனாதிராஜா இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புதல்வருமான கலை அமுதன் சேனாதிராஜா, வடமாகாணத்தின் நீண்டகால அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளையும் வேலைத்திட்டங்களையும் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் வடக்கில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் நீண்ட கால சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் உடனடி சாதகமான தீர்வுகளை காண்பதற்கு இந்தப் பிரச்சினைகளை சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் இதன்போது, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
பல தசாப்தகால மோதல்களுக்குப் பின்னர் மீண்டுவரும் வடமாகாணத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய இந்த வேலைத் திட்டங்களின் முக்கியத்துவத்தை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி திருமதி.சசிகலா ரவிராஜ், வலியுறுத்தினார்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமையும் விசேட அம்சமாகும்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார் என மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.