எப்போதும் தேர்தலுக்காக அன்றி நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார் – கோகிலா குணவர்தன

15 0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தலை இலக்காகக் கொள்ளாமல் நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார் என்றும், நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் அரசியல் தீர்மானங்களை எடுக்கக் கூடாது என அவர் உறுதியாக நம்பியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்தார்.

திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் “பிளேன்டி” குடிக்குமாறும், துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுமாறும் விஜித ஹேரத் எச்சரிப்பதாகவும், திசைகாட்டி வெற்றி பெற்றால்,  2022 இல் நாடு இருந்த நிலைக்கு மீண்டும்  திரும்ப நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  கோகிலா குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இன்று பொருளாதார ரீதியாக ஸ்திரமாகிவிட்ட நாட்டை  திசைகாட்டிக்கு வாக்களித்து பின்னோக்கித் திருப்ப வேண்டாம் என்று  மக்களைக் கேட்டுக்கொண்ட அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமாயின் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி அவருக்கு தெளிவான வெற்றியை வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன,

‘‘ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை இந்த நிலைக்கு மிக இலகுவாக கொண்டு வரவில்லை. அதற்காக சில சமயங்களில் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவை அனைத்தையும் நாட்டு மக்களின் நலனுக்காகவே செய்தார். அதன் பலனை இன்று அனுபவித்து வருகிறோம். அடுத்த ஐந்து வருடங்களில் இந்த வேலைத்திட்டம் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று மக்கள் நம்புகின்றனர். 2022ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பினார். இந்த உண்மை மக்களுக்கு நினைவு இருக்கின்றது.

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்ற போது இந்த நாட்டின் நிலைமையை நினைவு நினைத்துப்பாருங்கள். ஒரு முட்டை நூறு ரூபாவுக்கு வாங்கியது ஞாபகம் வரும். சில சந்தர்ப்பங்களில் ஒரு இறாத்தல் பாண் வாங்கக் கூட கிடைக்கவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த். இந்த நிலையில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றார்.

அத்துடன், எதிர்காலத்தில் நம்பிக்கையில்லாத, வட்டி வீதம் பாரியளவில் உயர்ந்து வரிசையில் இருந்த நாட்டையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் கடுமையான முடிவுகளை எடுத்து, அவற்றால் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு நிவாரணம் அளித்து நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

மக்களின் ஏழ்மை 25% அதிகரித்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சமுர்த்திக்குப் பதிலாக அந்த பணத்தை மூன்று மடங்காக அதிகரித்து ‘அஸ்வெசும’ வழங்கினார்.

அந்த முடிவுகளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும் தேர்தல்களுக்காக அன்றி, நாட்டு மக்களுக்காகவே செயற்பட்டார். எதிர்வரும் காலத்தில் நாட்டை நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்மானங்களைக் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது தோழர்கள் பற்றிய கதைகளை கேட்டவுடன், நாட்டை திசைகாட்டியிடம் ஒப்படைக்க முடியுமா என்ற கேள்வி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. “பிலேன்டி குடிகுமாறும்,  பெல்ட்களை இறுக்கிக் கொள்ளத் தயாராகுமாறும் அவர்களே எச்சரிக்கின்றனர். எனவே திசைகாட்டிக்கு வாக்களித்து 2022 இல் இருந்த இடத்திற்கு, இந்த நாடு செல்ல  வேண்டுமா?  என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

நாம் “பிளேட்டி” குடித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஜனாதிபதி பாலுடன் தேநீர் குடிக்கும் நிலைக்கு இந்த நாட்டைக் கொண்டு வந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. சரியான தலைமையின் கீழ் முறையான நிதி நிர்வாகம் இல்லையென்றால், இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த நிலை நம் நாட்டிற்கும் நிச்சயம் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே, ஒரு பெண்ணாகவும், தாயாகவும், உங்கள் குழந்தையைப் பற்றியும் இந்த நாட்டைப் பற்றியும் சிந்தித்து இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலமும் உங்களின் பெறுமதியான வாக்குகளிலேயே தங்கியுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சஜித் பிரேமதாச என்பவர் ஐ.தே.க. இருந்து பிரிந்த சென்றவர். இந்த நேரத்தில் நாட்டைப் பற்றியும், நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யும் வகையில் சிலிண்டரின் முன்பாக வாக்களிக்குமாறு உண்மையான ஐக்கிய தேசியக் கட்சியினரை கேட்டுக்கொள்கின்றேன்.’’ என்றார்.