நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தற்போது 75% தொங்கு பாலத்தின் பயணத்தை எட்டியுள்ளதுடன், தொங்கு பாலத்தின் பயணத்தை முடித்து, மீண்டும் வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டுமென்றால், கட்சி நிற பாகுபாடின்றி இந்த நாட்டு அனைத்து மக்களும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
க்ருஷா ஒரு நதாலியாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், தான் இரண்டு நதாலியாக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும், இருவரும் குழந்தையின் உரிமைக்காக குரல் கொடுத்தாலும், தொங்கு பாலத்தின் பயணத்தை முடித்து நாட்டை வெல்வேன் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அம்பாறையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
‘’இன்று நாம் மிக முக்கியமான தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்றே கூற வேண்டும்.
வளமான, சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடு வேண்டுமா அல்லது வரிசை யுகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் தீர்மானிக்க வேண்டும். எனவே, மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லாமல் நாம் அனைவரும் ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மேடையில் என்னை எப்போதும் விமர்சித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறான மேடைகளில் இருந்தவர்கள் எங்களை அரசியல் ரீதியாக விமர்சித்தனர். ஆனால் எல்லோரும் முடியாது என்று ஓடியதும் நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை முன்னேற்றினோம்.
நாங்கள் யாரும் அரசியலைப் பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்களை வாழவைக்க விரும்பினோம். நாட்டு மக்கள் உணவு, மருந்து இன்றி தவிக்கும் போது, எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக வரிசையில் நின்று தவிக்கும் போது சஜித்தும் அநுரவும் அவர்கள் படும் துன்பத்தை கண்டுகொள்ளவில்லை.
ஆனால், மக்கள் படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசியலை ஒதுக்கிவிட்டு, மக்களை வாழவைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றிணைந்தோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பினோம்.
உலகில் பொருளாதாரம் சரிந்த ஏனைய நாடுகளைப் பார்க்கும் போது, அந்த நாடுகள் எதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஆனால், நாங்கள் அந்த சாதனையை செய்தோம். இப்போது நாம் இந்த நாட்டை 2022இல் இருந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
அதன்மூலம் இந்த அம்பாறை திகாமடுல்ல பிரதேசத்தை பாரிய அபிவிருத்திக்கு கொண்டுவருவோம். மகாவலியால் கைவிடப்பட்ட பகுதிகள் விவசாயத்திற்காக திறக்கப்படுகின்றன. மேலும், கடலில் மீன்பிடி தொழில்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. அதேவேளை, பானம தொடக்கம் நிலாவெளி வரையிலான அபிவிருத்தியடைந்த சுற்றுலா வலயம் உருவாக்கப்படும்.
இந்த நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது இந்த இரண்டு நதாலியாக்கள் எங்கே இருந்தார்கள் என்று கேட்கிறேன். எங்கள் பயணத்தை தொங்கு பாலத்தில் முடித்துவிட்டு இரண்டு நதாலியாக்களை வெளியேற்றுவோம் என்று மக்களுக்குச் சொல்கிறேன். நாடு பெற்றுள்ள இந்த பொருளாதார வெற்றியை கட்சி, நிற பேதமின்றி அனைவரும் பாதுகாப்போம். அதற்கு கேஸ் சிலிண்டருக்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க,
‘‘கடந்த 30 வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நான் பேசியுள்ளேன். ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களை எரித்து நாடு அராஜகமாக இருந்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே நிலைமையை சீர்செய்து அமைதியான நாடாக மாற்ற முன்வந்தார். ஜனாதிபதி மாளிகையையும், அலரி மாளிகையையும் தாக்கிய போராளிகள் பாராளுமன்றத்தைத் தாக்க வந்தபோது போராளிகளிடம் இருந்து பாராளுமன்றத்தை காப்பாற்றினார்.
பயங்கரவாத கும்பல்கள் இந்த நாட்டை சட்டமின்றி ஆட்சி செய்ய ஆரம்பித்த காலம் முதல் அவர்களிடமிருந்து நாடு விடுவிக்கப்பட்டு, பொருளாதாரம் சரியாக நிர்வகிக்கப்பட்டு, மக்கள் வாழ அவர் நடவடிக்கை எடுத்தார். எனவே, ‘ரணிலால் இயலும்’ என்பது இன்று காட்டப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் டீசல் 2500 ரூபாயாக இருந்த காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோம். உணவும் மருந்தும் இல்லாத காலம். பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் குழுக்களிடம் நாட்டை ஒப்படைத்தால் அந்த நாடு பங்களாதேஷாக மாறிவிடும். எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தல் உங்களுக்கும் நாட்டுக்கும் முக்கியமானது. ஜனநாயகத்தைப் பாதுகாத்த மாவீரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, உங்கள் வாக்கு மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்வோம்.’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் தயா கமகே,
‘‘அன்று மக்கள் நம்பிக்கையின்றி வாழ்ந்தனர். எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற ஒரு சகாப்தத்தை மக்கள் கடந்து சென்றனர். மக்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. கிழக்கை சுற்றுலா வலயமாக மாற்றும் அவர், அம்பாறை மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை செய்துவருகிறார்.
அம்பாறை மக்களின் பொருளாதாரத்தை சுற்றுலாத் துறை மற்றும் விவசாயத் துறை ஊடாகவும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் அம்பாறை மக்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும். ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குவதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்த ஒவ்வொரு பொருளாதார வேலைத் திட்டங்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியின் பின்னர் முன்னெடுக்கப்படும். அதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மக்களின் ஆதரவை கோருகிறேன்.’’ என்றார்.
முன்னாள் அமைச்சரின் சட்டத்தரணி ஸ்ரீயானி விஜேவிக்ரம
‘‘இந்த ஜனாதிபதித் தேர்தலை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகவே கருத முடியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், சில குழுக்கள் ஜனாதிபதி மாளிகையைத் தாக்குவதற்கு முயற்சித்தனர். இதற்காக மக்களை போராட்டங்களுக்கு அழைத்தனர்.
பொதுவாக, உலகின் பிற நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களுக்காக செயற்படுவார்கள். ஆனால் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகள் மக்களை போராட்டத்திற்கு அழைத்து நாட்டை அராஜகமாக்குவதற்காக செயற்பட்டன.
நாட்டுக்கு சேவையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் இலங்கை இன்னொரு பங்களாதேஷாக மாறியிருக்கும். இவற்றை மக்கள் மறக்கவில்லை. எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக மக்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம்.’’ என்றார்.
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் இங்கு உரையாற்றினார்.
மகாசங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல.எம். அதாவுல்லா, உள்ளூராட்சி மன்றங்களின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.