சிட்னி தமிழ் அறிவகத்தின் ‘வசந்த மாலை’

375 0

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் இயங்கி வரும் சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த நிகழ்வான ‘வசந்த மாலை’ மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Bowman Hall மண்டபத்தில் நடைபெற்றது.

மாலை 5:30 மணிக்கு ஹோம்புஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வு தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளினால் களை கட்டி இருந்தது.

சிட்னியில் பிரபல்யமான சங்கீத ஆசிரியரரான சிறீமதி. மாலதி சிவசீலனின் ‘ஸ்ருதிலயா’ மாணவர்கள் வழங்கிய ‘இசை வேள்வி’ நிகழ்வோடு கலை நிகழ்வோடு ஆரம்பித்திருந்தன.

நேர்த்தியான உடை ஒழுங்கும், மேடை அமைப்பும், பாடல்களும் குருவின் திறமையை பறை சாற்றின. தொடர்ந்து, சிட்னி தமிழ் அறிவகத்தின் தலைவர் திரு மகாலிங்கம் மோகன்குமார் அவர்களின் உரையும், அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையும் இடம்பெற்றிருந்தன.

தமிழர்களின் கலாச்சாரத்தின் பெருமையையும், எமது விழுமியங்களையும் வெகுவாக பாராட்டிய இவர்கள் தமிழர்களின் கடின உழைப்பு பற்றியும் தமது உரையில் தொட்டிருந்தனர்.

தொடர்ந்து பிரபல்யமான நடன ஆசிரியையான சிறீமதி. மிர்னாளினி ஜெயமோகனின் ‘அபிநயாலயா’ நடனப் பள்ளி மாணவர்களின் ‘ஆடல் இன்பம்’ நிகழ்வு இடம்பெற்று இருந்தது. சிறுவர்கள் முதல் சிரேஷ்ட மாணவர்கள் என பலவித நடனங்களினால் பார்வையாளர்களை மகிழ்வித்தனர் மாணவர்கள்.

இந்நிகழ்வுகள் யாவும் சிட்னி வாழ் சிறார்களினாலும், இளையோர்களினாலும் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகும். அதற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாடசாலை மாணவியின் திறமை. இவர் உயர்தர பரீட்சைக்கு தமிழை ஒரு பாடமாக எடுக்கவிருக்கும் ஒரு மாணவி ஆகும்.

இளையோர்களை ஊக்குவிப்பதில் சிட்னி தமிழ் அறிவகம் தனக்கென தனியொரு இடத்தை வைத்திருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் இந்த பணி பாராட்டப்பட வேண்டியது ஆகும். சுமார் 200 நூல்களோடு 1991 ஆம் ஆண்டு சிறிய நூலகமாக ஆரம்பமாகிய அறிவகம் இன்று 9,000-க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தே கொண்டு, பல் சேவைகளை வழங்கும் தமிழ் அறிவகமாக வளர்ந்து நிற்கின்றது. அதன் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துவோமாக.

இணைய முகவரி: www.stre.net.au
மின்னஞ்சல்: info@stre.net.au
தொலைபேசி: +61 2 9635 5748