சிறிலங்காவின் சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களைக் கோருகிறோம்! ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி.

186 0


சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இம்மாதம் 21ம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வாக்களிக்காது அதனை முற்றுமுழுதாகப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி கோருகிறது.

சிறிலங்காவின் ஒற்றையாட்சி யாப்பின் பிரகாரம் முழுமையான நிறைவேற்றதிகாரங் கொண்ட நாட்டின் அதிபராக சனாதிபதி விளங்குகிறார். நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் தனது பதவிக்காலத்தில் சர்வ அதிகாரங்கொண்டவராகச் செயற்படுவார். கடந்த காலங்களில் சனாதிபதிகளாக இருந்தவர்களின் நெறிப்படுத்தலிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான கொடுரமான இனப்படுகொலை நடந்தேறியது.

சனநாயக முறையில் மக்களால் சனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகின்றபோதிலும், இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் நலனில் மட்டும் அக்கறைகொண்டவர்களாகவும் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்குபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.எண்ணிக்கையில் சிறுபான்மையினாரகவுள்ள தேசிய இனங்களின் இருப்பை உறுதி செய்யும் வகையிலும், அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வகையிலும் அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படும்வரை, சனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் பங்குகொள்ளவதானது பேரினவாதிகளின் இனவழிப்புச் செயற்பாட்டிற்;கு அங்கீகாரம் வழங்கும் செயற்பாடாகவே அமையும்.

இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலிலும், வெற்றிவாய்ப்புகளைக் கொண்டவர்கள் எனக் கருதப்படும் வேட்பாளர்களாக அனுரகுமார திசாநாயக்க, இரணில்விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எவ்விடயத்தையும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கவில்லை. ஆதலால் இவர்களில் ஒருவர் வெற்றியீட்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எப்பயனும் கிட்டப்போவதில்லை. அதே சமயத்தில் கடந்தகால சனாதிபதிகள் கடைப் பிடித்துவந்த சிங்கள மயமாக்கல், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு இவர்களது ஆட்சியிலும் தொடரும் என அச்சப்படுவதற்கு இடமுண்டு.

இவற்றுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளர் என தமிழரசுக்கட்சி உறுப்பினரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பாக்கியசெல்வம் அரியநேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லாத நிலையிலும், சிறிலஙகாவின் சனாதிபதித் தேர்தல் சனநாயக வழிமுறையில் தமிழ் மக்களின் பங்களிப்பு நடந்தேறியதனை உறுதிப்படுத்தவதற்கான உபாயமாக, 39 வேட்பாளர்களில் இவரும் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடந்த சனாதிபதித் தேர்தல்களில் பலங்குறைந்த எதிரிக்கு வாக்களிக்கிறோம் என்று காரணங்காட்டி சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்களே இன்றைக்கு தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்கள் என்பது மக்கள் அறிந்ததே.
தமிழ்ப் பொதுவேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் குழப்பகரமான கருத்துகளே காணப்படுகின்றன. சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறையை நிராகரிக்க மறுக்கும் அதே சமயத்தில், சமஷ்டித் தீர்வு பற்றியும் இவர்கள் பேச முற்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் இக்கொள்கைகளை பொது வாக்கெடுப்பாகக் காட்டும் அபாயமும் காணப்படுகிறது. 1977ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்களித்த தமிழ் மக்கள் மீள அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

இத்தகைய புறச் சூழலில் சனாதிபதித் தேர்தலை முற்றுமுழுதாகப் புறக்கணிக்குமாறு தாயக உறவுகளை ஈழத்தமிழர் மக்கள் அவை-யேர்மனி, வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.