ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கவில்லை. தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது தொடர்பில் தெரியாதவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
ஏனைய பெரும்பான்மை இனத்தைப் போன்று சிறுபான்மையினரின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது இலக்காகும் என நவ சமசமாஜக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரியந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எந்தவொரு வேட்பாளரும் தேசிய பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்கவில்லை. தற்போது தனவந்தர்களுக்கான ஆட்சி காணப்படுகிறது. இனிவரப் போகும் ஆட்சியும் அவ்வாறானதாகவே அமையும்.
நாட்டில் அரசியல் ரீதியான இணக்கப்பாடொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையே சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதால் வலியுறுத்தப்படுவது கட்சியொன்றுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும் என்பதல்ல.
நாடு அபிவிருத்தியடைய வேண்டுமெனில் மக்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அதுவே ஒருமைப்பாடாகும். ஆனால் அந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் எந்த தலைவருக்கும் முடியாமல் போயுள்ளது.
இனவாத செயற்பாடுகளால் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியாமலுள்ளது. நவ சமசமஜாக் கட்சி என்ற ரீதியில் நாமே இனங்களுக்கிடையில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமையவே எம்மால் அந்த ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம். எனவே மக்கள் மீது பலவந்தமாக அதனை சுமத்த முடியாது.
அதற்காக நாம் காலம் காலமாக போராடியிருக்கின்றோம். இம்முறைத் தேர்தலில் எவருமே பாரியளவில் இனவாத்தை பேசவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே அவர்கள் இனவாதத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது தொடர்பில் தெரியாதவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம் என்றார்.