சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளது

43 0
இன்று முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஏழு நாட்கள் மாத்திரமே இருக்கின்றன.  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சட்டத்தின்படி சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை  நடாத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கிறது.  அந்த பொறுப்பினை நடைமுறையில் ஈடேற்றுகையில் பொலிஸாரும் ஏனைய அரச சேவைகளும் உதவி புரிகின்றன. இவ்விதமாக நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற  அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றி நாட்டின் எல்லா பக்கங்களிலும் உறுதியாகி உள்ளது என இளைப்பாறிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  மார்க் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இதுவரை முன்வைத்துள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை.

2024 செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மன்றக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் விருந்துபசாரமொன்ற நடைபெற்றது.  இதுவும் மக்கள் அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான உபசரிப்பாக நிலவுகின்றது.

அதைப்போலவே சுகாதார அமைச்சர் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு “வோட்டர்ஸ் எஜ்” ஹோட்டலில் கூட்டமொன்றை நடாத்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். அது நடாத்தப்பட்டது.  எந்தவிதமான தயக்கமும் அச்சமுமின்றி  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ “பேஸ்புக் கணக்கில்” இது நேரலையாக பிரசுரமாகியது. அவர்கள் சட்டத்தை மீறி எம்மை குறைகூறுகிறார்கள்.

கடந்த 13 ஆம் திகதி நிரொஷன் பாதுக்க இணைப்பாக்கம் செய்து “சினமன் லேக்’  ஹோட்டலில் போசன விருந்தொன்று நடாத்தப்பட்டது. அதில் ஒரு பீங்கான் சாப்பாட்டின் பெறுமதி ரூபா 5,500  விட அதிகமாகும்.

பிலியந்தலையில்  ஜனாதிபதியின் கூட்டமொன்றை நடாத்த நீர்கொழும்பு டிப்போவிலிருந்து  லங்கம சாரதிகள், நடாத்துனர்கள்  மற்றும் ஏனைய குழுவினரை ஈடுபடுத்தி சட்டவிரோதமான   போக்குவரத்து அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஏதாவது நடந்த பின்னர்  அந்த இடங்களுக்குச் செல்வதில் பலனில்லை.  எனினும் எதிர்காலத்திலேனும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள  தத்துவங்களுக்கு அமைவாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புகிறோம்.  அதன் மூலமாக உண்மையாகவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென  நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.