சிறுபான்மை இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

232 0

இறக்குவானை நகரில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டியொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்து, பின்னர் அது மோதலாக மாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்துள்ள போதிலும், சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் ஆஜர்ப்படுத்துமாறு அவர் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் உபத் தலைவர் ரூபன் பெருமாளினால் தனக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே, தான் பொலிஸாருக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினராக இருக்கின்றவர்கள் ஒற்றுமையாக செயற்படாத பட்சத்தில், அது எமது சிறுபான்மை சமூகத்தை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறான பிரச்சினைகள் காணப்பட்டாலும், அவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

தமக்கிடையிலான பிரச்சினைகளை மாற்று வழிகளை கொண்டு செயற்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், அதன் இழப்புக்களை நாமே சந்திக்க நேரிடும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.