சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 57 வயதான விவேகானந்தன் இன்று (திங்கள்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற வாலிபரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த மார்ச் 5-ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருமே சிலமுறை காலாப்பட்டு மத்திய சிறையில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இருப்பினும் தொடர்ந்து விவேகானந்தன் தொடர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார், குறிப்பாக சோப்பை சாப்பிடுவது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என்ன பல வகைகளில் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி செய்து வந்த நிலையில் காவலர்கள் அவரை மீட்டு பாதுகாப்பு அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வழக்கில் கடந்த மே மாதம் 6-ம் தேதி 80 சாட்சிகளுடன், 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு குற்றவாளிகளையும் முதல்முறையாக புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நீதிபதி சுமதி முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை நாளை (செப் 17-ம்) தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளை வழக்கு விசாரணை ஆஜர் ஆக வேண்டிய நிலையில் தான் விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடலை மீட்ட சிறை அதிகாரிகள் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காலாப்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.