எதிர்தரப்பு வேட்பாளர்கள் வாக்கு கோரும் சுதந்திரமான நிலையைக்கூட ரணில் உருவாக்கினார்!

23 0

 

“2022 களில் நாட்டு மக்கள் எவராவது தம்மை மீட்க வருவார்களா என்று ஏக்கத்துடன் காத்திருந்த காலத்தில் இன்றிருக்கும் வேட்பாளர்கள் எவரும் வரவில்லை.  நாடு சமூகமான நிலைமைக்கு வந்திருக்கும்போது இன்று மற்றையவர்கள் ஆட்சி அதிகாரம் கேட்கிறார்கள். எனவே நாட்டைப் பாதுகாத்த ஜனாதிபதியுடன் பயணிப்பதே பாதுகாப்பு.

ஜனாதிபதி ஒருவர் ஒருபோதும் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. அவர்களைத் தெரிவு செய்யப்போகும் நாட்டு மக்களே வரிசையில் நின்று அல்லல்பட நேரிடும். இன்று 1,350 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற்றுத் தந்திருக்கும் அரசாங்கம் விரைவில் மிகுதித் தொகை சம்பள அதிகரிப்பையும் பெற்றுத் தரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, நுவரெலியா மாநகரில் 15.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்  ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், சப்ரகமுவ ஆளுநர் நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பீ.திசாநயக்க, நிமல் பியதிஸ்ஸ, மனுஷ நாணயக்கார, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றும் போதே செந்தில் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஒரு சதம் கூட சம்பள அதிகரிப்பு பெற்றுத்தராவர்கள், தொழிலாளர் சம்பள பிரச்சினை பற்றி பேச தகுதியற்றவர்கள். அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லயங்களை கிராமங்களாக மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு அநுரகுமார திசாநாயக்க விவசாய அமைச்சு, காணி அமைச்சுக்களில் இருந்த வேலையில் ஒரு அங்குல காணியைக் கூட மக்களுக்கு வழங்கியதில்லை. சஜித் பிரேமதாச 2015 – 2019 வரையில் வீடமைப்பு அமைச்சராக இருந்தார். இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு மிஞ்சியதாக ஒரு வீட்டைக்கூட கட்டித்தரவில்லை. அமைச்சராக இருந்தபோது மலையகத்தை தெரியாதவர் கண்களுக்கு ஜனாதிபதியான பின்னர் மலையகம் தெரியுமா.

ஆனால் இன்று எதிர்தரப்பு வேட்பாளர்கள் வாக்கு கோரும் சுதந்திரமான நிலையைக்கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே உருவாக்கினார். இ.தொ.கா வேறு எவருக்கும் ஆதரவளிக்காது என்பதையும் உறுதியாக சொல்கிறோம். 1988 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானே மலையக மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுத்தந்தார். அதற்கும் மற்றைய வேட்பாளர்கள் உரிமை கோருவது தவறானது. எனவே, ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.” என்றார்.