மாவோயிஸ்ட் தலைவருக்கு எதிராக என்ஐஏ துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

24 0

மாவோயிஸ்ட் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், பிஹாரில் இந்த இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க சதி நடப்பதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பிஹாரில் மாவோயிஸ்ட் இயக்கத்தை புதுப்பிக்கும் சதி திட்டத்தில் ஈடுபட்ட அந்த இயக்கத்தின் வடக்குப் பிரிவு தலைவர் பிரமோத் மிஸ்ரா, அவருக்கு உதவிய வினோத் மிஸ்ரா ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கில் வினோத் மிஸ்ராவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், கூடுதலாக துணை குற்றப்பத்திரிகையை கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்தது.

இவர்கள் தவிர அனில் யாதவ் என்பவர் மீதும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது. தலைமறைவாக இருந்த அனில் யாதவை கடந்த மார்ச் 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.