கைதான சுகேஷ் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டார்

250 0

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது ஆன சுகேஷ் சந்திரசேகர் விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு பெற்றுத்தர தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர பேரத்தில் ஈடுபட்டதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இவ்வழக்கில், அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் டெல்லி தீஸ் ஹசாரி சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பூனம் சவுத்ரி தலைமையிலான அமர்வில் நேற்றுமுன்தினம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

போலீஸ் காவலில் சுகேஷை தூங்க விடாமல் போலீசார் மன உளைச்சல் அளித்து வருகிறார்கள். இது அவரது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். அவருக்கு மாற்று உடையும் வழங்க அனுமதிக்கவில்லை. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சுகேஷ் தெரிவித்தார். எனவே, அவரை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் தெளிவாக தெரியும்வகையில், சட்டையில் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

போலீஸ் காவலில் கொல்லப்படுவோம் என்று அஞ்சுவதால், சுகேஷின் போலீஸ் காவல் முழுவதையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதன் அடிப்படையில், டெல்லி போலீஸ் உயரதிகாரிகள் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று சுகேஷ் தரப்பில் வக்கீல் தீபா முருகேசன் மீண்டும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி அமர்வு முன்பு ஆஜராகி டெல்லி போலீசாரின் விளக்கம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.டெல்லி போலீஸ் தரப்பில் அதிகாரி ஒருவர் ஆஜராகி, கைதுசெய்யப்பட்ட சுகேஷை டெல்லி போலீசார் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார். மூத்த அதிகாரிகள் டெல்லிக்கு திரும்பி வந்த பிறகு இவை குறித்து கோர்ட்டுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு வக்கீல் தீபா முருகேசன், சுகேஷை டெல்லிக்கு வெளியில் அழைத்துச் சென்றுள்ளதை நிரூபிக்கும் வகையில் டெல்லி போலீசார் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அதற்கு நீதிபதி, ‘கோர்ட்டில் அவ்வளவு சுலபமாக பொய் சொல்ல முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர், வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டது, கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் கவலைப்படத் தேவையில்லை’ என்று கூறினார்.
சுகேஷின் வக்கீல் மேலும் கூறுகையில், ‘டி.டி.வி. தினகரனுடன் சுகேஷுக்கு எந்த தொடர்பும் கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ளவை எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள். சுகேஷை பலிகடா ஆக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக செய்துள்ளனர்’ என்றார்.

சுகேஷின் போலீஸ் காவல், வருகிற 25-ந்தேதி முடிவடைவதால், அடுத்தகட்ட விசாரணையை 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சுகேஷுக்கு அவருடைய குடும்பத்தினர் மாற்று உடைகள் வழங்கவும் அனுமதி அளித்தனர்.இதற்கிடையே சுகேஷை நேற்று இரவு பெங்களூருவுக்கு போலீசார் அழைத்து வந்தனர். அவருக்கு பணம் பெங்களூருவில் வழங்கப்பட்டதாக கூறப்படுவதால் அங்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.