தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை அதிகரித்து தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு தேவையான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2005 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ்வை வெற்றிபெறச் செய்ய, ரட பெரட என்ற கருப்பொருளை மக்கள் மயமாக்குவதற்கு நானே வித்திட்டேன். அதேபோன்று 2010லும் மஹிந்த ராஜபக்ஷ்வை வெற்றிபெறச் செய்ய முன்னின்று செயற்பட்டேன். ஆனால் நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களுடனே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதும் அதனை அவர்கள் சரியாக செய்யவில்லை. இடதுசாரி கொள்கையுடன் செயற்பட தவறினார்கள்.
அதேபோன்று ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க எங்களை பயமுறுத்த முடியாது. நாங்கள் எப்போதும் இடதுசாரி கொள்கைக்காக போராடி வருபவர்கள். மக்கள் விடுதலை முன்னணி இடதுசாரி கொள்கை பதாதையை காட்டிக்கொண்டு டீல் அரசியலை செய்து வருகிறது. அவர்கள் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சிவப்பு நிரத்தை தற்போது மறைத்துக்கொண்டுள்ளார்கள்.
இடதுசாரிகள் எப்போதும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி வருபவர்கள்.அதனால் அரசாங்கமோ அரசாங்கத்தின் பெயரால் தொழிலாளர்களின் உரிமைகளை இல்லாதொழிக்க யார் செயற்பட்டாலும் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.
மேலும் இடதுசாரிகளின் சகோதரத்துவம் என்பது உள்ளத்தால் வருவதாகும். ஆனால் இன்று அந்த சகோதரர் என்ற வார்த்தை தங்களின் சொந்த அரசியலுக்காக பயன்டுத்தப்பட்டு வருகிறது. அதனால் அரசியல் நோக்கத்துக்காக அந்த வார்த்தையை பயன்டுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். எனது தந்தை இடது சாரி கொள்கையுடையவர். எனது தந்தையின் வழியிலே நானும் இருந்து வந்தேன். அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. என்றாரும் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி இந்த நாட்டை அழித்து வருகின்றனர்.
அதனால் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டு இருக்க முடியாமலே இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். எனவே நாட்டை கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டத்தை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும் எனது வேலைத்திட்டத்துக்கும் பாரிய வித்தியசத்தை காணலாம். அதனால் மக்கள் எனது வேலைத்திட்டத்தை பார்த்து, நாட்டை முன்னேற்ற எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.