சிறையில் அடைத்த உத்தரவு ரத்து: ஜாபர் சாதிக்கின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

38 0

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் ‘சூடோபெட்ரைன்’ என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதைதொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அமலாக்கத் துறையும், திகார் சிறை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.