சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 03 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இந்திய பிரஜை உட்பட 06 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 13, கொழும்பு 15 , கொழும்பு செட்டியார்தெரு, ஹட்டன், கொட்டகலை மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இந்திய பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று புதன்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் இந்தியாவிலிருந்து இரு வெவ்வேறு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 159 விஸ்கி போத்தல்கள், சொக்கலட் வகைகள், 05 கிலோ கிராம் ஏலக்காய், நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஆடை வகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.