ஜப்பானில் 2011-ம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தது. அணுமின் நிலையத்திற்குள் கடல்நீர் புகுந்து அங்குள்ள அணுஉலைகள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இதனால் அதன் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
அணுஉலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக அணு கழிவுகள் அங்கு தேங்கி கிடக்கின்றன.இந்த கழிவுகள் மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்த ஜப்பான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்தநிலையில் அங்குள்ள அணுஉலை கழிவுகளை அகற்ற நவீன ரோபோவை பயன்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. 3 டன் அளவில் கழிவுகள் இருக்கலாம் என கருதப்படுகிறது. கதிரியக்க அளவினை அறிந்த பின்னர் முழு வீச்சில் இந்த பணி தொடரும் எனவும், இதனை அகற்ற 40 ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.