சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து முடிவை அறிவிப்போம் – எஸ்.சிறிதரன்

16 0

இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானம் முறையாக மேற்கொள்ளப்படாத பின்னணியில், தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான விசேட குழு சகல வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களையும் மீண்டும் நன்கு ஆராய்ந்து, யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி உரியவாறான அறிக்கையொன்றை வெளியிடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இம்மாதம் முதலாம் திகதி நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும் இத்தீர்மானம் குறித்து கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இத்தகைய குழறுபடிகளுக்கு மத்தியில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் வேட்பாளர்கள் முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து, அவற்றின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதெனத் தீர்மானிக்கும் நோக்கில் தமிழரசுக்கட்சியினால் கடந்த மாதம் நிறுவப்பட்ட விசேட குழு நேற்று செவ்வாய்கிழமை வவுனியாவில் கூடியது.

தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உள்ளடங்கும் குழுவில், சரவணபவன் தவிர்ந்த ஏனைய ஐவரும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறிதரன், கடந்த முதலாம் திகதி கட்சியின் மத்திய குழு கூடிய வேளையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சிலரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை எனவும், தற்போது அவை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றையும் நன்கு ஆராய்ந்ததன் பின்னர் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி இறுதித்தீர்மானம் ஒன்றை எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அதுகுறித்த தீர்மானத்தையும் இக்குழு மீண்டும் கூடி ஆராய்ந்து மேற்கொள்ளும் எனவும், அதற்கு முன்பதாக தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்து உரியவாறான அறிக்கையொன்றை வெளியிடும் எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.