அநுரவின் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை

24 0

நாட்டின் 76வருட காலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அதனாலே இளைஞர் போராட்டங்கள் இடம்பெற காரணமாக அமைந்தன என்ற தேசிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இளைஞர்களுக்கு வலுப்படுத்தும் அதிகமான வேலைத்திட்டங்களை ரணில் விக்ரமசிங்கவே ஆரம்பித்தார் என ஐக்கிய தேசிய கட்சியின் பானந்துறை தொகுதி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான நந்தன குணதிலக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாடு சுதந்திரமடைந்து 76 வருட காலத்தில் ஆட்சியில் இருந்துவந்த எந்த அரசாங்கமும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றும் அதன் காரணமாகவே 71, 88 கலவரம் வடக்கு யுத்தம் போன்றவை தோன்றுவதற்கு காரணமாக அமைந்நன என்றும் தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகிறது.

ஆனால் இவர்களின் இந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை. பாடசாலை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, படிப்படியாக இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டில் தற்போது 10ஆயிரத்துக்கும் அதிகமான பாடசாலைகள் இருக்கின்றனர்.

அதேபோன்று பாடசாலைக்கல்வியை தொடர்ந்து உயர்தர கல்வியை தொடர்வதற்கு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு, இளைஞர்களுக்கு சமூகத்தில் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மகபொல புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டு வருகிறது. இன்று அனுரகுமார திஸாநாயக்கவும் இந்த நாட்டின் இலவசக்கல்வியில் பயன்பெற்றே பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றார்.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணியே இந்த நாட்டில் இளைஞர்களை தவறாக வழிநடத்தி, இளைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை இல்லாமலாக்கி வந்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியினால் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுவந்த இளைஞர்கள் தங்களின் கல்வியை விட்டு அல்லது பட்டம் பெற்ற பின்னர் நாட்டில் சோசலிச சமூகத்தை ஏற்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் இளைஞர்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து, இளைஞர்களை தவறாக வழிநடத்தியதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை அழித்துக்கொண்டார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிரை இழந்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியே இவ்வாறு இளைஞர்களுக்கு இருந்து வாய்ப்புக்களை இல்லாதொழித்து வந்தது.

அதேநேரம் இளைஞர்களுக்கு நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என தெரிவித்து வரும்  அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர்களை வலுவூட்டும் எந்த வேலைத்திட்டமும் இல்லை. ஆனால் இந்த நாட்டில் இளைஞர் யுவதிகளுக்கு தேவையான  பயிற்சி நிறுவனங்கள், தொழில் கல்வி நிறுவனங்களை அமைத்தது ரணில் விக்ரமசிங்கவாகும். இளைஞர் மன்றத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கவும் ரணில் விக்ரமசிங்கவே நடவடிக்கை எடுத்தார் என்றார்.