விமானப்படை வீராங்கனையை கடத்திய சம்பவம் தொடர்பில் தந்தை மற்றும் மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சீன துறைமுக விமானப்படை தளத்தில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவரும் அவரது தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் வறக்காப்பொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடத்தப்பட்ட விமானப்படை வீராங்கனை தனது மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருக்கும் போது காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் விமானப்படை வீராங்கனையை கடத்திச் சென்று வீடொன்றிற்குள் தடுத்து வைத்துள்ளனர்.
இதன்போது, இந்த விமானப்படை வீராங்கனை குறித்த வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.