தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நிலையான திட்டங்களை செயற்படுத்துவேன்

23 0

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை உருவாக்கியுள்ளேன். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நிலையான திட்டங்களை செயற்படுத்துவேன். என  தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற ‘ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி, பதில் வருமாறு,

கேள்வி – சுகாதாரம், நலன்புரி,கல்வி, பொது போக்குவரத்து, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு, ஆகிய அடிப்படை தேவைகளை சகல பிரஜைகளும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு  காணப்பட வேண்டும். நீங்கள்  ஆட்சிக்கு வந்தால் இந்த அடிப்படைத் தேவைகளை அனைவரும் நியாயமான வகையில் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கும் யதார்த்தமான  நடவடிக்கைகள் மூன்றை குறிப்பிட முடியுமா ?

பதில் – நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்கான யோசனைகளை பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக முன்வைத்துள்ளோம்.  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருடாந்தம்  4இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில் 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களுக்கு மாத்திரம் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கிறது. ஆகவே உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அனைவருக்கும்  பல்கலைக்கழகத்துக்கு இணையான உயர் கல்வியை வழங்கும் யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இரத்து செய்து அதற்கு பதிலாக  உயர் கல்வி ஆணைக்குழு சட்டவரைவை தயாரித்து ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளேன்.இந்த திட்டங்களை முழுமையாக அமுல்படுத்தினால் நாட்டின் கல்வித்துறை முன்னேற்றமடையும். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.

நாட்டின் பொது போக்குவரத்து சேவை மிக மோசமானது.  2003 ஆம் ஆண்டு  ஆட்சியில் இருந்த அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபையை விற்பனை செய்தது. இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தனி மனிதனாக நான் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தேன். இதன் பின்னரே கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டன.

பொதுப்போக்குவரத்து  துறையை மேம்படுத்துவதாயின் அரச – தனியார் பங்குடைமையிலான முறைமைக்கு செல்ல வேண்டும். அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதார காப்புறுதி திட்டங்களை வழங்க வேண்டும்.இலத்திரனியல் முறைமை ஊடாக இதனை அறிமுகப்படுத்த முடியும்.

கேள்வி –வங்குரோத்து நிலைக்கு ஊழல் மற்றும் அரச நிர்வாகத்தின் பலவீனம் பிரதான காரணிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, சிறந்த நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியன தொடர்பில் உங்களிடமுள்ள திட்டங்கள் என்ன ?

பதில் – நிதி வங்குரோத்துக்கான காரணத்தை அனைவரும் அறிவோம். வங்குரோத்து நிலைக்கு செல்ல கூடாது என்பதற்காக எடுத்த பல தீர்மானங்களை முறையாக செயற்படுத்தாத காரணத்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்தின் ஊடாக அறிமுகப்படுத்திய சிறந்த திட்டங்கள் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன. தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு நீக்கப்பட்டது. 21 ஆவது திருத்தத்தின் ஊடாக அவற்றை மீண்டும் அமுல்படுத்தினோம்.

ஊழலுக்கு எதிராகவும், சிறந்த அரச நிர்வாகத்துக்கும் தேவையான சட்டங்களை இயற்றியுள்ளோம். சட்டங்களை நடைமுறையில் செயற்படுத்தக் கூடிய சிறந்த தலைவரை தான் தெரிவு செய்ய வேண்டும்.

2006 ஆம் ஆண்டு முதல் மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளும் தற்போதைய வங்குரோத்துக்கு ஒரு காரணம்.நிதி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள். இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 58 பில்லியன் டொலர் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்று சர்வதேச அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.இருப்பினும் மத்திய வங்கி உரிய வகையில் செயற்படவில்லை.

கேள்வி – 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என்ன ?

பதில் – யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்தோம். காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை வெகுவிரைவில் நிறைவு செய்ய சட்டத்தால் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளேன். நிலையான தீர்வுக்கு உரிய நடவடிக்கைகளை செயற்படுத்துவேன்.