மொரட்டுவ வாகன விபத்துக்களில் இருவர் பலி!

23 0

வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி , மொரட்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி பிரதான வீதியில் கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து  சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவராவார்.

சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொரட்டுவை பொலிஸ் பிரிவில், கொழும்பு – காலி பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று வீதியைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கட்டுபெத்த சந்தியிலிருந்து பிலியந்தலை நோக்கிச் பயணித்த தனியார் பஸ் ஒன்றே விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பாதசாரி படுகாயமடைந்து லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் லுனாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.