யாழ். செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி குமாரசாமி கிருசாந்தியின் நினைவேந்தல்

32 0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (07) மாலை செம்மணி பகுதியில் நடைபெற்றது.

இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவுகூரப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில்  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

1996 செம்டம்பர் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கிருஷாந்தியை செம்மணி இராணுவ முகாமில் தடுத்துவைத்திருந்ததை பிரதேச மக்கள் அவதானித்ததையடுத்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரன் குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடிச் சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்துள்ளனர்.

அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.