சஜித்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகம் – அங்கஜன் இராமநாதன்

28 0

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா,  வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07)  இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘இயலும் ஸ்ரீ லங்கா’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும்.இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள்.  ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள்.

நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா?  அல்லது வீழ்ச்சியடைவதா ?  என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.ஆனால்  இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம்,

தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.

ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார்.