ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆராய்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

34 0

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், இருப்பினும் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்படுமாயின் அதுகுறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனிடையே 2023ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதன் காரணமாக வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அமீர் பாயிஸ், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடாத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசித்துவருவதாகவும், தற்போது வரை அதில் (தேர்தலை நடாத்துவதில்) எவ்வித தடங்கல்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் பட்சத்தில், அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலை நடாத்தவேண்டியிருக்கும் எனவும், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் எனவும் அமீர் பாயிஸ் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அத்தகைய சூழ்நிலையில் முதலில் பாராளுமன்றத் தேர்தலையும், தாமதமின்றி அடுத்ததாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களையும் நடாத்துவது குறித்து ஆணைக்குழு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.