நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
‘நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்? இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்துக்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். மாற்றத்துக்கு எதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அத்தகைய தீர்மானம் தவறானது என்பதை நீங்கள் உங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நாங்கள் வெற்றிபெறுவோம். தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றியின், மாற்றத்தின் பங்குதாரர்களாக நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். மாறாக அந்த மாற்றத்துக்கு எதிரானவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.’
தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் அமைந்த அநுரகுமார திஸாநாயக்கவின் இக்கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றிக் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருப்பதாகவும், எனவே சிங்களவர்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழர்களால் வாக்களிக்கமுடியாது எனவும், மாறாக எது சரியோ அதற்கே வாக்களிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை யாரேனுமொரு வேட்பாளர் வழங்கியிருந்தால் தாம் அதுபற்றிப் பரிசீலித்திருப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, ‘தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?’ எனக் கேட்கின்றார். அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும். அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார். இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்’ என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று ‘அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுப்படி தமிழர்களுக்கென எந்தவொரு அரசியல் இலக்குகளும் இல்லை. அவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்துவிட்டு, நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டும்’ என்று விசனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சஞ்சுலா பீற்றர், ‘ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேசிய மக்கள் சக்தி மாறுபட்டது என்று கூறுவதை இனியேனும் நிறுத்துங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார்.