வடக்கு, தென்னிலங்கை மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும்

42 0

வடக்கு மக்களுக்கு  சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில்  மக்களை அச்சுறுத்தியது தொடர்பில்   வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தியை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நிற்கிறோம். ரூபாய் பெறும் வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை தேர்தல் தீர்மானிக்கும்.

அன்று நாங்கள் அரசமைத்த போது அனுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 2 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம்.

சில சமயங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். வரிசை அதிகரித்து செலவை குறைத்தோம். மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர். சிறந்த எதிர்காலம் கிடைக்குமென மக்கள் நம்பினர். எனவே மீண்டும் வரிசை யுகத்திற்கு தேவையில்லை. எனவே முன்னோக்கிச் செல்வோம்.

ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனான ரூபாய் வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது.  அந்த சலுகை மக்களுக்கும் கிடைக்கிறது.  வீட்டின் கஷ்டங்களை பெண்களே அறிவர்.  பொருட்களின் விலை குறைந்ததால் அஸ்வெசும நிவாரணம் வழங்கினோம்.

அதேபோன்று பொருளாதாரம் தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தனியார் துறையில் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்போம். அரச ஊழியர்கள் பெரும் சுமைகளைத் தாங்கிக்கொண்டனர்..

அதனால் இன்று வாழ்க்கைச் சுமை சற்று குறைந்திருக்கிறது. இத்தோடு விட்டுவிடாமல் மக்கள் சுமையை மேலும் குறைப்போம். கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். மக்களுக்கு காணி உறுதிகளை தந்திருக்கிறேன். ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை தேர்தலின் பின் அந்த திட்டம் தொடரும்.

அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக வேலைத் திட்டங்கள் என்னிடம் உள்ளது. அதனால் தான் ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்கிறேன். அனுவரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும்.

நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப் சலுகைகள் கிடைக்காது. அதனை செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.

நாம் இப்போது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால் பெருமளவில் வரி அறவீட்டு பரப்பை அதிகப்படுத்தி வரிச்சுமையை குறைக்க வேண்டும். பெண்களே பொருளாதார நெருக்கடியின் பிரச்சினைகளை பல கஷ்டங்களுக்கு மத்தியில் நிர்வகித்தனர். அதற்காக பெண்களைப் பாராட்டுகிறேன். பெண்கள் பட்ட கஷ்டங்களை மறுக்கவில்லை. எனவே பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.

உள்ளூராட்சி, மாகாண சபைகளில் பெண்களின் பிரச்சினைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு வழங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். சட்ட உதவிகளையும் பெண்களுக்கு வழங்குவோம். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வட்டி வீதம் குறைக்கப்படும்.

விவசாய நவீனமயமாக்கலை வடக்கிற்கும் வழங்குவோம். வருமானத்தை அதிகரிக்க வழி செய்வோம். மலையக பகுதிகளிலிருந்தும் அதற்காக ஒத்துழைப்பு பெறப்படும். அதனால் மக்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதற்காக சலுகைக் கடன்களையும் வழங்குவோம். சுற்றுலாப் பயணிகள் வருகையை இரட்டிப்பாக அதிகரிப்போம். அதற்காகவே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தோம்.

வடக்கில் மூன்று கைத்தொழில் பேட்டைகளை அமைப்போம். டிஜிட்டல் பொருளாதார மையங்களையும் அமைப்போம். யாழ். மக்கள் வௌியில் சென்று தொழில் செய்யாமல் இங்கு தொழில்களை செய்ய வழிமுறைகளை உருவாக்குவோம். யாழ். நதி திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு தருவோம்.

கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதற்காகவே ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டம் செயற்படுத்தப்படும். மீண்டும் மாகாண சபைகளை செயற்படுத்துவோம். பாரிய அபிவிருத்திகளை செய்ய மாகாண சபைகளின் பங்களிப்பு அவசியம்.

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது ‘தெற்கு மக்கள் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபட்டிருக்கும் போது வடக்கு மக்கள் அதற்கு மாறான தீர்மானத்தை எடுத்தால் தெற்கு மக்களின் மனோபாவம் எவ்வாறு இருக்கும்’ என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்வது வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகும். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கூறினோம். மக்கள் வாக்களித்தனர். ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு மக்களை அச்சுறுத்த வரவில்லை.

ஆனால், ஜே.வீ.பி மக்களை அச்சுறுத்துகிறது. அனுரவிற்கு வெற்றிபெற்ற அனுபவம் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியமும் இல்லை. வடக்கு மக்களின் சட்டரீதியான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். எனவே, மக்களை அச்சுறுத்தியதையிட்டு ஜேவீபியினர் வெட்கப்பட வேண்டும். அனுர திசாநாயக்க இதற்காக வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக சிங்கள மக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனவே, விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது.” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்,

“இன்று யாழ். மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். தொடர்ச்சியாக பல தடவைகள் யாழ்.மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் நான் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்போகிறேன்.

எனவே, எமது தேவைகளுக்காக வந்த தலைவர்களோடு இருக்கவேண்டும்.. தேவையில்லா நேரத்தில் வந்த தலைவர்கள் பின்னால் நிற்பதுபொருத்தமல்ல. நாம் நன்றி மறப்பவர்கள் அல்ல. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றிருக்காவிட்டால் இலங்கை சோமாலியாவை போன்ற நிலையை அடைந்திருக்கும். கீழே விழுந்து கிடந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானங்களால் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் தமது இருப்பை காப்பதற்கான தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

கடந்த இரு வருடங்களில் மக்களுக்கு நிம்மதியை தந்த தலைவராகவே ஜனாதிபதி இருக்கிறார். இலங்கை தமிழரசுக் கட்சி வேடடிக்கையான வேலைகளை செய்கிறது. மறுமுனையில் சுமந்திரன் ஓடிப்போய் எதிர்கட்சித் தலைவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார். தமிழ் மக்களின் வாக்குகளை புதைக்குழிக்குள் தள்ளும் வகையிலேயே சுமந்திரனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் மக்கள் நன்கு தெரியும்.

எதிர்கட்சித் தலைவர் நல்லாட்சியில் இருந்தபோது வடக்கு மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்யாமல் விட்டுவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு செய்வதாக கூறுவது வேடிக்கையாகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பித்தற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும்.” என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

“நாடு மிகக் கஷ்டத்திலிருந்த வேளையில் மீட்க வந்தமைக்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் ஆதரவளித்தோம். அரசியல் இலாபம் கருதாமல் நாட்டை பற்றி சிந்தித்து அவர் செயலாற்றியதாலேயே எம்மால் தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது.. அவரைக் கண்டு பலரும் பொறாமை கொண்டிருந்தாலும், நாம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென நினைக்கிறோம்.

பொருளாதார நெருக்கடியால், தெற்கிலும் வடக்கிலும் மக்கள் பெரும் நெருக்கடிகளை கண்டனர். விவசாயம் செய்ய முடியாமல் போனது. இன்றைய நிலை அவ்வாறானதல்ல ஜனாதிபதி எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதேபோல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். இந்நாட்டின் தெற்கிலிருந்த தலைவர்கள் வடக்கு மக்களை இரண்டாம் பட்சமாகவே கருதினர். ஆனால், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அதனால் தான் தெற்கில் போன்றே வடக்கு மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்கினார். இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தவும் அவர் பெருமளவான நிதியை ஒதுக்கியிருக்கிறார். விமான சேவை அமைச்சராக நியமித்த வேளையிலும் பலாலி விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகளை கொண்டுவரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார்.

அதன்படியே யாழிலிருந்து இந்தியாவிற்கு எலயர்ன்ஸ் எயார் விமான சேவை இடம்பெறுகிறது. நாளாந்தம் இரு விமான சேவைகள் இடம்பெறுகின்றன. விரைவில் இண்டிகோ விமான சேவையும் விமானப் பயணத்தை பலாலியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. இவ்வாறான விடயங்களை வடக்கு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியிருக்கிறார். எனவே, யாழ். மக்கள் சரியானவரைத் தெரிவு செய்ய வேண்டும்.” என்றார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

”2022 ஆம் ஆண்டில் நான் கல்வி அமைச்சராக பொறுப்பெடுத்த காலத்தில் பாடசலைகள், கல்விச் செயற்பாடுகள் என அனைத்தும் ஸ்தம்பிதமடைந்து கிடந்ததையே காண முடிந்தது. இன்று வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பற்றாக்குறை, நிர்வாகச் சேவையிலிருக்கும் பற்றாக்குறையும் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கியிருக்கிறோம்.

அடுத்த வருடத்திலிருந்து கொத்தனிப் பாடசாலைகளை அமைத்து பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பௌதீக வளங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். யாழ். மக்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் சமூகம். நாம் இன்று நாட்டை மீட்க முற்படும் வேளையில் ஜேவீபியினர் கல்விச் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகளையே முன்னெடுத்தனர்.. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்கினார்.

எனவே, புதிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. நாம் ஆரம்பித்த பணிகளுக்காக சுற்று நிருபங்களை வெளியிட வேண்டிய தேவை உள்ளது. சம்பளப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க போகிறார் என்பதை அனுரகுமார திசாநாயக்க எங்குமே கூறவில்லை. சஜித்தும் அவ்வாறுதான் சொல்கிறார். ஆனால் இவர்களின் ஆட்சி வந்தால் சம்பள அதிகரிப்பு செயன்முறை முற்றாக சரிவடையும்.

கடந்த காலத்தில் அரசாங்கம் அடைந்த வெற்றியின் பலனாகவே அரசாங்கம் இந்த சலுகைகளை வழங்குகிறது என்பதை மக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.” என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

“இன்று சில வேட்பாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனவாதி என்கிறார்கள். எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் 2015 – 2019 வரையில் கலாச்சார அமைச்சராக இருந்தபோது 1000 விகாரைகள் கட்டத் தீர்மானித்திருந்தார். அவற்றை தமிழ் மக்கள் அதிகமான பகுதிகளில் செய்யவே அவர் அனுமதி வழங்கியிருந்தார்.  அவ்வாறின்றி, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதனை செய்திருந்தால் அவருக்கும் நாமும் ஆதரவளித்திருப்போம். எனவே இவ்வாறான தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என்று சொல்வது வேடிக்கையானது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அவர் ஜனாதிபதி பதவியை இன்னொருவருக்கு வழங்க முன்வந்த வேளையில் எவரும் அதனை ஏற்க முன்வராமல் ஓடிவிட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை மீட்டெடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது ஒரு மரம் வளர்ப்பது போன்றதாகும். நன்றாக வளர்ந்த மரத்தை இலகுவாக வெட்டி வீசிவிட முடியும். ஆனால் அந்த மரத்தை வளர்ப்பது கஷ்டமாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதைபோல புதியவர்களை நம்பி ரணில் ஆட்சிக்கு முடிவுகட்டினால் எல்லோரும் சென்று வரிசைகளில் நிற்க நேரிடும். இன்று வடக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தொடர்ந்தும் தீர்வுகளை வழங்குகிறார். ஆனால் எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லை.

இங்கிருந்து மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்ற அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பொலிஸ் துறைசார் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை நிர்வகிக்க முடியும். வடக்கிலிருந்து 6 கெபினட் அமைச்சர்களைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வருகிறார். அதனால் நமது உரிமைகளை நாமே விட்டுக்கொடுக்கிறோம். நாம் தவறு செய்வதால் இன்னுமொருவர் வந்து தனது சமூகத்திற்கு அதனை செய்கிறார். எனவே, மக்கள் சரியான தலைவரை தெரிவு செய்து அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும்.” என்றார்.

இந்து மதத் தலைவர்கள், யாழ். மாவட்ட விவசாய திணைக்களத் தலைவர் தியாகலிங்கம், பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர்.