கடந்து வந்த பாதையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறந்துவிட்டார். எதிர்வரும் 22ஆம் திகதி எமது பலத்தை ஜனாதிபதிக்கு காண்பிப்போம். பெரும்பான்மையான மக்கள் எம்முடன் உள்ளார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் கட்சி மட்டத்தில் வழங்கினோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்பதால் தான் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்கினோம்.
ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடுகளுக்கு நாங்கள் எதிராக செயற்படுவதால் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து எம்மை நீக்கினார்.
ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும்போது அனைத்து சாதக மற்றும் எதிரான கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
நாட்டுக்காக ஜனாதிபதி பக்கம் சென்றுள்ளோம் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எதிர்வரும் 22ஆவது திகதி எமது பலத்தை ஜனாதிபதிக்கு காண்பிப்போம். பெரும்பான்மையாக மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்றார்.