திருடிய மோட்டார் சைக்கிளில் சென்று 9 பேரிடம் சங்கிலி அறுப்பு!

13 0

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பல இடங்களுக்குச் சென்று பல பெண்களிடம் கத்தியை காட்டி சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞனும், திருடப்பட்ட தங்க நகைகளை கொள்வனவு செய்த வவுனியாவை சேர்ந்த இரு வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா தோணிக்கல் பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இளைஞன் பெண்ணின் கழுத்தில் இருந்த மூன்று பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து சென்றுள்ளான். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அனுராதபுரத்தை சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தில் கைது செய்திருந்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது குறித்த இளைஞனிடம் இருந்து அனுராதபுரத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டதுடன், குறித்த திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில் அனுராதபுரம் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு சங்கிலியும், மிகிந்தலை பகுதியில் மூன்று சங்கிலியும், பரசண்கஸ்கல பகுதியில் ஒரு சங்கிலியும், பூனாவப் பகுதியில் ஒரு சங்கிலியும், பூவரசங்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், உலுக்குளம் பகுதியில் ஒரு சங்கிலியும், தோணிக்கல் பகுதியில் ஒரு சங்கிலியும் என 9 இடங்களில் குறித்த இளைஞனால் சங்கிலிகள் அறுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

அத்துடன், திருடப்பட்ட நகைகள் வவுனியா நகர் பகுதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இரண்டில் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன், இரு நகைக்கடை உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு வேறு பல குற்றச்செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பல்வேறு நீதிமன்றங்களில் 6 பிடியாணைகள் காணப்படுகின்றன. அதில் நான்கு திறந்த பிடியாணையும், இரண்டு நாள் பிடியாணையும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மற்றும் கடை உரிமையாளர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.