மதுரை கலைஞர் நூலகம் மூலம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்: அமைச்சர் பி.மூர்த்தி

14 0

மதுரையில் கலைஞர் நூலகம் அமைத்து தந்து மாணவர்களிடையே அறிவுப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்திலுள்ள மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம், பபாசி சார்பில் புத்தகத் திருவிழா தொடக்க விழா இன்று (செப்.06) மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்தார். மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் வரவேற்றார். இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பங்கேற்று புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது, “சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தொன்மை நகரம் மதுரை. சங்ககாலம் தொட்டு மதுரை நகரம் கல்வி வளர்ச்சியையும், கலை இலக்கியத்தையும் பெரிதும் போற்றும் நகரம். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின், மதுரைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்து தந்து மாணவர்களிடையே அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். புத்தக வாசிப்பு என்பது அற்புதமான பழக்கம். பாடப்புத்தகங்களை தாண்டி பல்வேறு நூல்களை வாசிப்பதால் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்களை கற்றுத்தெளியலாம். மாணவர்கள் புத்தகங்களை படித்து அறிவைப் பெருக்கி கொள்ள வேண்டும். கலைஞர் நூலகத்தில் படித்து ஏழைஎளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாகி வருகின்றனர். கலைஞர் நூலகங்களை மாணவச் செல்வங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த விழாவில், மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், இவ்விழாவில், எம்எல்ஏ மு.பூமிநாதன, மாவட்ட துணை மேயர் தி.நாகராஜன், பபாசி பொருளாளர் வா.ஜெ.சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா நன்றி கூறினார். புத்தகத்திருவிழா செப்.6ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 முதல் இரவு 09 மணி வரை நடைபெறும். 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தினமும் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்களின் உரைகள், பட்டிமன்றங்கள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.