பொருளாதார நெருக்கடிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாற்றியமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறும். ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச,அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானங்களுக்கு எவ்விதமான நிபந்தனையில்லாமல் ஒத்துழைப்பு வழங்கினோம்.
பொருளாதார மீட்சிக்காக எடுத்த தீர்மானங்கள் வெற்றிப் பெற்றுள்ளன.
குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சிப் பெற்றுள்ளோம்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனையில்லாமல் ஆதரவு வழங்கி புதிய அரசியல் கூட்டணியை அமைத்துள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மறுசீரமைத்தால் நாட்டில் மீண்டும் வரிசை யுகம் தோற்றம் பெறும். என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பரீட்சித்துப் பார்க்கும் நிலையில் நாடு இல்லை.
ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் பொருளாதார கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டு மக்கள் சிறந்த அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.