சிறைக்கைதிகளின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய நடைமுறைச்சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதனை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.
சிறைக்கைதிகளின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிசெய்வது குறித்து ஆராயும் நோக்கிலான சந்திப்பொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதற்கு சட்ட ரீதியாகத் தகுதிபெற்ற சிறைக்கைதிகளை வாக்களிப்பதற்கு அனுமதிப்பதில் நிலவும் நடைமுறை சவால்கள் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது. சிறைச்சாலைக்குள் வாக்களிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்தல், வாக்களிப்பு செயன்முறையின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தல் போன்றன அச்சவால்களில் உள்ளடங்குகின்றன.
இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சகல தரப்பினரும் சிறைக்கைதிகளின் வாக்களிப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டதுடன், அதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான தீர்வை அனைவரும் ஒன்றிணைந்து கண்டறிவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
அதுமாத்திரமன்றி சிறைக்கைதிகளின் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய சில நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், வெகுவிரைவில் இதற்கு ஏதுவான சாத்தியமான வழிமுறையொன்றைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளிடம் உத்தரவாதமளித்தனர்.