வெள்ளி விழாவைக் கொண்டாடிய தமிழாலயம் ஏவ்ற்ஸ்ரட்

545 0

தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஏவ்ற்ஸ்ரட் தமிழாலயத்தின் வெள்ளிவிழா கடந்த 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்குத் தாயகத்தையும் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களையும் காத்திடும் நோக்கோடு செயலாற்றிய மக்களையும் மாவீரர்களையும் நினைவேந்திப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. பொதுச்சுடரினை ஏவ்ற்ஸ்ரட் நகரத் துணைமுதல்வர் திருமதி ஸ்ரெபானி பேற்மன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து சிறப்பு வருகையாளர்களாக வருகைதந்தோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவி மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர். சிறப்பு வருகையாளர்களான ஏவ்ற்ஸ்ரட் ஏதிலிகள் தஞ்ச நிறுவனத்தின் திருமதி மோனிகா கெஸ்லர், திருமதி கெல்கா பேர்புர், திருமதி மோனிகா லக்ஸ்மன், குடியேற்ற உதவிச் செயற்பாட்டாளர் திருமதி சண்டி அவார்ட், தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம், மத்திய மாநிலப் பொறுப்பாளர் திரு. கணபதி சிவசுப்பரமணியம், தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழாலயத்தின் நிர்வாகி திரு. சிதம்பரப்பிள்ளை பரமதாஸ், மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களான “தமிழ் மாணி” திருமதி பிறேமினி ரஞ்சித் மற்றும் “தமிழ் வாரிதி” திருமதி மோகனறஞ்சினி புண்ணியமூர்த்தி ஆகியோரால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டதையடுத்து, அகவணக்கம், தமிழாலயகீதம் என்பவற்றைத் தொடர்ந்து வெள்ளி விழாவின் அரங்க நிகழ்வுகள் தொடங்கின.

அரங்கிலே கலை நிகழ்வுகள் முத்தமிழால் நகர்த்திச் செல்ல, அகவை நிறைவு விழாவின் சிறப்பம்சமாகச் சிறப்புமலர் வெளியீடு இடம்பெற்றது. குத்துவிளக்குகள் ஒளிமுகம் காட்டிவரப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் புடைசூழச் சிறப்புமலரானது அரங்கம் வரச் சிறப்புமலரை மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் “தமிழ் மாணி” திருமதி பிறேமினி ரஞ்சித் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியை முன்னாள் நிர்வாகி திரு. இராசநாயகம் சேயோன் அவர்கள் பெற்றுக்கொண்டார். வெளியீட்டுரையைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் “தமிழ் மாணி” திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் வழங்கினார். முதன்மை மற்றும் சிறப்பு வருகையாளர்கள், பெற்றோர்கள், சக தமிழாலயங்களின் வருகையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளென அனைவரையும் அரங்கிற்கு அழைத்துச் சிறப்புமலர் வழங்கப்பட்;டது. தமிழாலயத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆசிரியர்கள், தமிழாலயத்தில் கல்வியை நிறைவு செய்த மாணவர்கள், ஆண்டு 12வரை கற்றலை நிறைவுசெய்த மாணவர்கள் மற்றும் தமிழாலயத்தில் தற்போது கற்றுவரும் மாணவர்களுக்குமான மதிப்பளிப்புகள் இடம்பெற்றன.

ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பினைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் “செம்மையாளன்” திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வாழ்த்தி வழங்கி வைத்தார். முத்தமிழ் அரங்காக விரிந்த கலைநிகழ்வுகளின் தொடராக அகதியின் நினைவுகள் என்ற எழுச்சிகரமான நாடகம் பார்வையாளர்களின் கண்களை நனைத்துச் சென்றிடத் தமிழர் தாகத்தை அடையும் இலக்கு நோக்கி நடப்போம் என்ற நம்பிக்கையோடு தாகம் சுமந்த பாடலை எல்லோரும் இணைந்து பாடியதோடு, ஏவ்ற்ஸ்ரட் தமிழாலயத்தின் வெள்ளி விழாச் சிறப்போடு நிறைவுற்றது.