சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாத்தல், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் நல்லிணக்க சமூகத்தை நிலைநாட்டுதல், புதிய அரசியலமைப்பு, செனட்சபை உருவாக்குதல், அரசியலமைப்பு நீதிமன்றம், தேர்தல் முறையில் திருத்தம், மனித உரிமைகள், தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை. அரச வரி கொள்கையைத் திருத்தியமைத்தல், கல்வி. சுகாதாரம் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கிய, தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ்வின் முறையான நாடொன்று எனும் தொனிப்பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனம் வியாழக்கிழமை (05) இலங்கை மன்றக்கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள்,மதத்தலைவர்கள். புத்திஜீவிகள், சிவில் அமைப்பினர். வியாபாரிகள் என பல தரப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்பமாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ் தேர்தல் விஞ்ஞாபனத்தை மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு கையளித்து, அதன் உள்ளடக்கம் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய தேவைப்பாடுகள் தொடர்பிலும் விஜயதாச ராஜபக்ஷ் உரையாற்றினார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இருந்து வந்த ஏற்பாடுகளுக்குச் சமமான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்வாங்கப்படாமை, செனட் சபை முறைமையை நீக்கி அதன் அதிகாரத்தைப் பாராளுமன்றத்துக்கு வழங்கியமை, அரச சேவை ஆணைக்குழுவை நீக்கி, அதன் அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்கியமை போன்ற காரணங்களால் நாட்டில் தேசிய ஐக்கியம் வீழ்ச்சியடைந்தது. அரச பொறிமுறை அரசியல் மயமாக்கப்பட்டது. அதனால் மக்களால் அந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு 1977ல் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த அரசாங்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக்கொண்டு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு அமைக்கப்பட்டது. என்றாலும் இந்த அரசியலமைப்பில் அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, விகிதாசார தேர்தல் முறை, திறந்த பொருளாதார கொள்கை போன்ற விடயங்கள் ஆட்சியாளர்களின் துஷ்பிரயோகம் காரணமாக நாடு வங்குராேத்து அடைந்தது. அதனால் அனைத்து இன மக்களுடன் கலந்துரையாட புதிய அரசியலமைப்பின் தேவைப்பாடு தொடர்பில் தேர்தல் விஞஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இனங்களுக்கிடையில் ஐக்கியம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இன முரண்பாடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஒவொரு கிராமசேகவர் பிரிவிலும் மதத்தலைவர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பொருள்கோடல்கள் தொடர்பில், அடிக்கடி எழும் சிக்கல்களுக்குக் குறுகிய காலத்தில் தீர்வு காண அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை, விகிதாச்சார தேர்தல் முறையிலிருந்துவரும் மோசடிகளை இல்லாதொழிக்கும் வகையில் தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் பிரதானமாக உள்ளாக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்க்கைச்செலவுக்கு ஏற்ற வகையில் ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்கவும் வீட்டுப்பிரச்சினைக்குத் தீர்வுகாண விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, அரச வரிக்கொள்கை போன்ற விடயங்களை இலகுவன முறைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.