இரண்டு வருடங்களிற்கு முன்னர் முழு நாட்டிலும் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை மறக்கவேண்டாம்

18 0

2024 ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அவர் பல வேட்பாளர்கள் தனது ஆதரவை கோரியுள்ள போதிலும் நடுநிலைமை வகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப்போவதுமில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் நாட்டின் எதிர்காலம் முன்னர் ஒருபோதும் இவ்வாறான சவால்களையும் நிச்சயமற்றதன்மையையும் எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி  அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும்போது நாட்டின் நிலைமை குறித்து தீவிரமாக சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தனிநபர்கள் குறித்து சிந்திக்ககூடாது,ஒவ்வொரு வேட்பாளரும் முன்வைத்துள்ள திட்டங்கள் குறித்து சிந்திக்கவேண்டும்,அவர்கள் தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருக்ககூடியவர்கள் யார் என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றதிகார முறை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் கல்வி விவசயாம் ( குறிப்பாக சிறு விவசாயிகள்)சிறிய நடுத்தர தொழில்துறையினர் ,தோட்டதொழில்துறை,சுற்றுலாத்துறை,சர்வதேச வர்த்தகம் போன்ற துறைகளிற்கான கொள்கைகளிற்கும் முன்னுரிமை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து நேர்மை பொறுப்புக்கூறல் – அமைப்பு முறை மாற்றத்தை கோரி இரண்டு வருடங்களிற்கு முன்னர் முழு நாட்டிலும் வெடித்த பாரிய மக்கள் போராட்டத்தினை -இயக்கத்தினை நாங்கள் மறக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.