“தலித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே குறுகிய பார்வைதான்!” – ரவிக்குமார்

30 0

உள்ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிர்ப்பு, சீராய்வு மனு தாக்கல், முருகன் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு கண்டனம் என அடுத்தடுத்த அரசியல் நிலைப்பாடுகளைப் பேசிவருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இது தவிர திமுகவுடன் முரண்படும் காரணத்தால் திமுக – விசிக கூட்டணி நீடிக்குமா என்பன போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்தக் கேள்விகளை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் முன்வைத்தோம். அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த நேர்காணலில் இருந்து…

உள்ஒதுக்கீட்டை ஏன் விசிக எதிர்க்கிறது? சாதி ரீதியில் பிளவுபடுத்தும் நோக்கம் என விமர்சனம் வைக்கப்படுகிறதே?

“இடஒதுக்கீடு என்பது சமூக காரணிகள் அடிப்படையில் வழங்கப்பட வேண்டியது. ஆனால், பொருளாதார அடிப்படையில் முன்னேறிய சமூகத்துக்கு 10% வழங்கியது இடஒதுக்கீடு மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு, இடஒதுக்கீடு மீது தொடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தாக்குதல். 10% இட ஒதுக்கீடு கொண்டுவரும் போதே, அது முற்றிலுமாக இடஒதுக்கீட்டைச் சுருக்குவதாக கூறினோம். நாங்கள் அதைக் கடுமையாக எதிர்த்தோம். தற்போது இந்த உள்ஒதுக்கீடு தீர்ப்பையும் எதிர்க்கிறோம்.”

‘உள் ஒதுக்கீடு ரத்து’ என்னும் கோரிக்கையை விசிக ஒரு சமூகத்தைத் தாண்டி வளரவில்லை என்னும் அர்த்தத்தைக் கொடுக்கப்பதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?

“தேர்தல் ஆணையத்திடம் ஒரு சமூகத்துக்காக இயங்குகிறோம் எனச் சொல்லி அனுமதி வாங்க முடியாது. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் குறிப்பிடும் ’எல்லோரும்’ என்பதிற்குள் ’ஒரு சமூகம்’ மட்டுமே அடங்கியிருக்கும். குறிப்பாக, பாஜக எல்லோருக்குமான கட்சி என்று கூறினாலும் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அதேபோல், சில கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மட்டுமே இயங்குவார்கள். பட்டியலின மக்களின் நலன் அவர்கள் பட்டியலில் வராது.

ஆக, அனைத்து கட்சிகளும் அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரு சமூகத்துக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுவார்கள். ஆனால் நாங்கள் கூறும் ’எல்லோரும்’ என்பதில் ’அனைவரும்’ என்று தான் பொருள். இந்த உள்ஒதுக்கீடு தீர்ப்பை அனுமதித்தால் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு மட்டுமல்ல ஓபிசி இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விடும். ஆகவே எங்கள் கட்சி மட்டும்தான் எல்லோருக்குமான கோரிக்கையை முன்வைக்கிறது.இன்னும் குறிப்பாக, யாரெல்லாம் இந்தத் தீர்ப்பைப் பற்றி கருத்துச் சொல்லாமலும் கவலை கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் தான் எல்லோருக்குமான கட்சியாக இல்லை. ஆகவே, அனைத்து சமூகத்தை மனதில் வைத்துதான் இதனை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம்”.

கூட்டணி கட்சிகளான திமுக, சிபிஐ, சிபிஎம் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களை விமர்சிக்கிறீர்களா?

“ஒவ்வொரு கட்சியும் இந்தத் தீர்ப்பு குறித்து தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொருளாதார ரீதியில் முன்னேறிய ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு பயனளிக்கக் கூடாது எனக் கூறி கிரீமிலேயர் முறை கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்ப்பால் பட்டியலின மக்களுக்கு பாதிப்பில்லை என்றபோதிலும் அதனை எதிர்த்தோம். அப்போது பிற கட்சிகளும் கிரீமிலேயரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு கிரீமிலேயரை உருவாக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது அதனை எதிர்த்து ஓபிசி மக்கள் பேசியிருக்க வேண்டும். இதனை குறிப்பிட்ட கட்சியை விமர்சிக்கும் நோக்கத்தில் நான் பேசவில்லை. ஆனால் இது தொடர்பாக அனைவரும் மீண்டும் யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து. இதனால், பட்டியலின மக்களுக்கு மட்டும் பாதிப்பில்லை. ஓபிசியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்”.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விசிக தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனுவால் தீர்ப்பு மாற வாய்ப்புள்ளதா?

“உச்ச நீதிமன்றத்தின் அமர்வு கொடுக்கும் தீப்பில் மேல்முறையீடு செய்ய முடியாது. சீராய்வு மட்டும்தான் தாக்கல் செய்ய முடியும். அதிலும் வழங்கப்பட்ட தீர்ப்பைக் குறித்து வாதங்களை வைக்க முடியாது. அந்தத் தீர்ப்பில் குறிப்பிடாத புதிய வாதங்களை நாம் முன்வைக்கலாம். அதே ஏழு நீதிபதிகள் புதிய வாதங்களை மீண்டும் விசாரிக்கலாம். இல்லை என்றால், புதிதாக ஒரு அமர்வு விசாரணை நடத்தும். அதில் தீர்ப்பு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்படியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது தான் சபரிமலை, நீட் என பல விசாரணைகளில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது. மாணவர்களைப் பாதிக்கும் நீட்-க்கு தீர்ப்பு மாறுகிறது என்றால் மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த தீர்ப்பு மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்னும் நம்பிக்கையில் தான் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது”.

முருகன் மாநாட்டு தீர்மானத்தை நீங்கள் எதிர்த்திருந்தீர்கள். ஆனால், திருமாவளவன் அதை வரவேற்றார். இதில் ஏன் முரண்பாடு?

“மதச்சார்பற்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும். அதற்கு எதிராக அந்த மாநாட்டு தீர்மானங்கள் இருந்ததால் நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை. கட்சியின் உயர்நிலைக் கூட்டத்திலும் அதைக் கண்டித்து தீர்மானம் போட்டோம். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவியேற்ற பிறகு வரவேற்கத்தக்க பல திட்டங்களை முன்னெடுத்து இருக்கிறார். கோவில் நிலங்களை மீட்டிருப்பதும், பல கோவில்களைக் கண்டறிந்து கும்பாபிஷேகம் நடத்தியதும் பாராட்டத்தக்கது.ஆனால், இப்போது கொண்டுவந்த தீர்மானங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவுள்ளது. அதனால் அதனை கண்டிக்கிறோம்.”

தொடர்ந்து ‘திமுக – விசிக’ முரண்பட்டு வருகிறதே… கூட்டணியில் விரிசலா என்னும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

“அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை நோக்கி நகரத் தொடங்கி விட்டார்கள் . ஆகவே ’திமுக – விசிக’ வெற்றி கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என நினைக்கிறார்கள். ஆனால் இது உறுதியான கூட்டணியாக இருக்கிறது. கடந்த மூன்று தேர்தல்களில் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காரணம், இது வெறும் இடப்பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட கூட்டணி அல்ல.

அதனால்தான் மக்களவைத் தேர்தலின் போது விசிக மூன்று இடங்களைக் கேட்டது. ஆனால் இரண்டு இடங்களை மட்டுமே திமுக வழங்கியது. அந்தக் காரணத்திற்காக நாங்கள் வெளியேறவில்லை. அந்த இடங்களைப் பொருட்படுத்தாமல் கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டோம். அதற்கு முன்பு 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆறு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இருப்பினும் திமுக தலைமையிலான கூட்டணி ’அதிகாரத்திற்கு வர வேண்டும்’ என்பதைக் கடந்து தமிழகத்தைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து காப்பாற்ற ஆட்சிக்கு வர வேண்டும் என நாங்கள் எண்ணியதால் கூட்டணியை அமைத்தோம்.”

தலித் தலைவர்கள் முதல்வராக வருவதில் சிக்கல் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தாரே?

“பல மாநிலங்களில் தலித் தலைவர்கள் முதல்வர் ஆகியிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் தலித் முதல்வராகவில்லை என ஒரு ஆய்வின் (Analytics) அடிப்படையில் கருத்தை முன்வைத்தார். தான் முதல்வராக வரவேண்டும் என்னும் நோக்கத்தில் அவர் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. 2026-ல் தேர்தல் சூழல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தான் இந்த முழக்கம் வலுபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்க முடியும்.”

பிஎம்ஸ்ரீ நிதி விவகாரத்தில் விதிகளை ஒப்புக்கொண்டு முன்னாள் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியதாகவும் இப்போது தீடிரென மறுப்பதாகவும் பாஜக சொல்கிறதே?

”மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மாநில அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நாங்களும் சந்தித்தோம். கடந்த மார்ச் மாதத்தில் விதிகளைப் பின்பற்றுவோம் என்று கடிதத்தில் கூறிவிட்டு இப்போது ஏன் மறுக்கிறீர்கள்? என மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால், அனுப்பிய கடிதத்தைப் படித்த போதுதான் பி.எம் ஸ்ரீ பள்ளி என்னும் திட்டத்தைப் பின்பற்றலாமா என்பதைக் குழு அமைத்து ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம்” என தமிழக அரசு கூறியது தெரியவந்தது.

’விதிகளை ஒப்புக் கொள்கிறோம்’ என்று எந்த இடத்திலும் கூறவில்லை. அதுமட்டுமில்லாமல் தமிழகம் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய மாநிலம். எனவே கொள்கையில் எந்த சமாதானமும் செய்ய முடியாது என்பதை உறுதியாக கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. ஆனால், தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்கிறது மத்திய அரசு. அதனால்தான் இதனை ’பிளாக் மெயில் அரசியல்’ என விசிக தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்திலும் சாடியிருந்தார்.

தவிர, கேந்திரிய வித்யாலையா மற்றும் நவோதயா பள்ளிகளின் பெயர் மாற்றமே பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம். சில இடங்களில் மட்டும் தான் புதிய பள்ளிகள் அமைக்கப்படவுள்ளது. அதற்கு மாநில அரசும் நிதிப் பகிர்வை ஏற்க வேண்டும். பிரதமர் பெயரில் இயங்க மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டுமாம். ஆனால், அந்தத் திட்டத்தை ஏற்க வேண்டிய அவசியமே தமிழகத்துக்கு இல்லை. காரணம், மாநில அரசின் மாடல் பள்ளி சிறப்பாகச் செயல்படுகிறது.

எல்லா கொள்கையும் மாணவர்கள் இடைநிற்றலைக் குறைக்க முற்படும். ஆனால் புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் இடைநிற்றலை ஆதரிக்கிறது. இதனால் கல்லூரி டிகிரி என்பதன் மதிப்பே குறைந்து விடுகிறது. தேசிய அளவில் உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழகத்தை மேலும் உயர்த்தும் திட்டங்களை வகுக்காமல் மொத்தமாக காலி செய்ய முயல்கிறது மத்திய அரசு”.

பா.ரஞ்சித் – திருமாவளவன் இடையே என்ன சிக்கல்? படம் பார்ப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதே!

“திருமாவளவன் தாமாக திரையரங்கு சென்று படம் பார்க்கும் தலைவர் அல்ல. யாராவது படம் பார்க்க அழைத்தால் செல்வார். அப்படி மாரி செல்வராஜ் வாழை படம் பார்ப்பதற்காக அழைத்தார்.அதனால் திருமாவளவன் சென்றார், படம் குறித்து பேசினார். ஆனால், பா.ரஞ்சித் படம் பார்க்க அழைக்கவில்லை. அதனால், அது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்ட போது படம் பார்த்தால் தான் கருத்துச் சொல்ல முடியும் என்றார். ஆனால், தொடர்ந்து அரசியல் தலைவரைத் திரைப்பட இயக்குநருக்கு இணையாகக் கருதி கேள்விகளை முன்வைப்பது சரியான வாதமாக இருக்காது.”

தமிழகத்தில் தலித் தலைவர்கள் ஒருங்கிணைய வாய்ப்பு உள்ளதா?

“தமிழ்நாட்டு தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து காவிரி பிரச்சினை, மத்திய – மாநில நிதிப் பகிர்வு, தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினையைச் சரி செய்யலாம் என சொல்லலாமே. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என யாரும் சொல்வதில்லை. ஆனால், தலித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என ஏன் கூறுகிறார்கள்? இது எல்லோருக்குமான கட்சி என்பதிலிருந்து சுருக்கிப் பார்க்கும் பார்வை. தமிழ்நாட்டு நலனுக்காக தமிழ்நாட்டு தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனப் பேசுவது தான் சரியான வாதமாக இருக்கும்.”

பட்டியலின மக்கள் பாமகவை ஆதரித்தால் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக்கப்படுவார்கள் என்றாரே அன்புமணி.. அது குறித்து உங்கள் கருத்து என்ன

“தமிழகத்தில் இத்தனை சதவீத வன்னியர்கள் வாக்கு இருந்தும் அந்தச் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் கூட வரவில்லை. ஆனால், குறைந்த சமூக வாக்குகளைக் கொண்ட கருணாநிதி முதலமைச்சராக இருக்கிறார் எனக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியினர் ஆதங்கப்பட்டார்கள். எம்ஜிஆர் தொடங்கி ஸ்டாலின் வரை என அனைத்து முதல்வர்களும் தமிழகத்தில் குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கொண்ட பட்டியலின மக்களின் வாக்குகளால் தான் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆகவே,குறிப்பிட்ட இந்தச் சாதியைச் சேர்ந்தவரை முதல்வராக்குவோம் எனக் கூறி தேர்தலைச் சந்திப்பதெல்லாம் அரசியலமைப்புக்கு எதிரானது.” என்றார்.